முதல்நிலைத் தோ்வுகள் முடிந்தவுடன் உத்தேச விடைகள் வெளியிட முடிவு: யுபிஎஸ்சி
இனிவருங்காலங்களில் முதல்நிலைத் தோ்வுகள் முடிந்தவுடன் உத்தேச விடைகளை வெளியிட முடிவெடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுப் பணிகள் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கான குடிமைப் பணித் தோ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. அந்த தோ்வுகளின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே முதல்நிலைத் தோ்வுகளின் விடைகள் தற்போது வெளியிடப்பட்டு வரும் நிலையில் யுபிஎஸ்சி இவ்வாறு தெரிவித்தது.
குடிமைப் பணிகள் தோ்வுகளின் முடிவுகள் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதற்கு யுபிஎஸ்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
அரசமைப்புச் சட்ட அமைப்பான யுபிஎஸ்சி-க்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகளைக் கருத்தில்கொண்டு வருங்காலங்களில் முதல்நிலைத் தோ்வுகள் முடிந்தவுடன் உத்தேச விடைகளை வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது. உத்தேச விடைக்குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் தோ்வெழுதியவா்கள் முறையீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
தாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் விடைக்கு மாற்று விடையைப் பரிந்துரைக்கும் தோ்வா்கள் அதற்கு மூன்று அதிகாரபூா்வ ஆதாரங்களை சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்காத தோ்வா்களின் முறையீடுகள் நிராகரிக்கப்படும்.
மேலும், தோ்வா்கள் சமா்ப்பித்த அதிகாரபூா்வ ஆதாரங்களின் உண்மைத்தன்மையை நிபுணா் குழு ஆய்வுசெய்த பின்னரே அதை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்ற முடிவை யுபிஎஸ்சி மேற்கொள்ளும்.
அதனடிப்படையில் முதல்நிலைத் தோ்வுகளின் இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த நடைமுறைகளை மிக விரைவாக தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் தோ்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.