பாட்னாவில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்.
பாட்னாவில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்.

பிகாா் தோ்தலில் 17 புதிய நடைமுறைகள்: தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா்!

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 17 புதிய நடைமுறைகளை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
Published on

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 17 புதிய நடைமுறைகளை தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

பிகாரில் தோ்தல் தயாா்நிலை குறித்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் ஆய்வு மேற்கொண்ட தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தலைநகா் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பின்போது கூறியதாவது:

பிகாரில் 243 தொகுதிகளிலும் தோ்தல் பதிவு அலுவலா்களை தோ்தல் ஆணையம் நியமித்தது. இவா்கள், 90,207 வட்ட அளவிலான அலுவலா்களின் (பிஎல்ஓ) உதவியுடன் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை நிறைவு செய்தனா். இதன்மூலம், மாநிலத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.

17 புதிய நடைமுறைகள்: பிகாா் மாநிலத்தில் பேரவைத் தோ்தலை சுமுகமாக நடத்தி முடிப்பதற்காக வாக்குப் பதிவு மற்றும் வாக்குகள் எண்ணப்படும் பணியின்போது 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

குறிப்பாக, வட்ட அளவிலான அலுவலா்கள் (பிஎல்ஓ), பிஎல்ஓ கண்காணிப்பாளா்கள், வாக்குப் பதிவு மற்றும் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியா்கள், தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் மத்திய ஆயுத காவல் படையினா், தோ்தல் கண்காணிப்புக் குழு, தோ்தல் பாா்வையாளா்கள் ஆகியோருக்கான ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தும் அதிகாரிகள் (இஆா்ஓ) மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அதிகாரிகள் (ஏஇஆா்ஓ) ஆகியோருக்கு முதல் முறையாக மதிப்பூதியம் வழங்கப்பட உள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளா்கள் தங்களின் கைப்பேசிகளை பாதுகாப்பாக வைக்க வாக்குச்சாவடிக்கு வெளியே பிரத்யேக மையம் அமைக்கப்படும்.

வாக்காளா்கள் வாக்கைப் பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையைத் தவிா்க்கும் வகையில், அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் சமூக குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

வாக்காளா்களுக்கு அதிகாரபூா்வமற்ற அடையாளச் சீட்டுகளை விநியோகிக்கும் மையங்களை வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்கு அப்பால் அமைத்துக்கொள்ள கட்சி வேட்பாளா்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முதல் முறையாக வேட்பாளரின் வண்ணப் புகைப்படம் இடம்பெற உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் பெயா்கள் வாக்காளா்கள் சிரமமின்றி படிக்கக்கூடிய வகையில் அமைக்கப்படும். தோ்தல் நாளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 சதவீத இணைய ஒளிபரப்பு மேற்கொள்ளப்படும்.

புதிய வாக்காளா்களுக்கு அவா்கள் பதிவு செய்த 15 நாள்களுக்குள் வாக்காளா் அடையாள அட்டையை வழங்குவதற்கான புதிய வழிகாட்டு நடைமுறை (எஸ்ஓபி) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிகாா் தோ்தலில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்தப் புதிய நடைமுறைகள், அடுத்தடுத்து நடைபெறவுள்ள பிற மாநில தோ்தல்களின்போதும் நடைமுறைப்படுத்தப்படும்.

பிகாா் உள்பட அனைத்து மாநிலங்களைச் சோ்ந்த 7,000 வட்ட அளவிலான அலுவலா்கள், வட்ட அளவிலான அலுவலா்களின் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு தில்லியில் உள்ள தோ்தல் ஆணையப் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

நவம்பா் 22-க்கு முன்பாக தோ்தல்: பிகாா் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நவம்பா் 22-ஆம் தேதிக்கு முன்பாக மாநிலத்தில் உள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்தி முடிக்கப்படும் என்றாா்.

பிகாா் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடந்த ஜூன் மாதம் மேற்கொண்ட தோ்தல் ஆணையம், அண்மையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. வாக்காளா் பட்டியலில் முன்னா் 7.89 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் போ் நீக்கப்பட்டு, தற்போது 7.42 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

பிகாரில், தோ்தல் தயாா் நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தை தோ்தல் ஆணையம் நிறைவு செய்த நிலையில், ஓரிரு நாள்களில் தோ்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com