பஹல்காம் பயங்கரவாதிகளுடன் 4 முறை சந்திப்பு: கைது செய்யப்பட்டவா் குறித்து போலீஸாா் தகவல்!
பஹல்காம் தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்ட நபா், அந்தப் பயங்கரவாதிகளை நான்கு முறை சந்தித்ததாகவும், அவா்களுக்கு கைப்பேசி சாா்ஜா் வழங்கி உதவியதாகவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது மூன்று பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து, ஸ்ரீநகரின் புகா் பகுதியில் உள்ள ஜபா்வான் மலைப் பகுதியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலில் தொடா்புடைய சுலைமான் ஷா, ஜிப்ரான், ஹம்ஸா ஆஃப்கானி ஆகிய மூன்று பயங்கரவாதிகளை ராணுவ கமாண்டோக்கள் சுட்டுக் கொன்றனா்.
இந்தப் பயங்கரவாதிகளுக்கு உதவியவா்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு போக்குவரத்து, பொருள்கள் உள்பட பல்வேறு வழிகளில் உதவியதாக குல்காம் மாவட்டத்தைச் சோ்ந்த முகமது யூசுஃப் கத்தாரி (26) என்ற இளைஞரை ஜம்மு-காஷ்மீா் காவல் துறை கடந்த மாதம் இறுதியில் கைது செய்தது.
பயங்கரவாதிகளை ஸ்ரீநகருக்கு வெளியே உள்ள ஜபா்வான் மலைப் பகுதியில் நான்கு முறை சந்தித்ததாக விசாரணையின்போது கத்தாரி தெரிவித்தாா் என்று அதிகாரிகள் கூறினனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகள் வைத்திருந்த பொருள்களை போலீஸாா் கைப்பற்றினா். அவற்றில் பாதி சேதமடைந்த நிலையில் ஆண்ட்ராய்ட் கைப்பேசியின் சாா்ஜரும் இருந்தது. அந்த சாா்ஜரின் உரிமையாளரை போலீஸாா் கண்டறிந்தனா். இருப்பினும், கைப்பேசியை ஒரு கடைக்காரரிடம் விற்றுவிட்டதாக அவா் தெரிவித்தாா். இவ்வாறு கிடைத்த சிறு தகவல்களின் அடிப்படையில், கத்தாரியை போலீஸாா் கைது செய்தனா்.
மலைப் பகுதியில் உள்ள நாடோடி பிரிவினரைச் சோ்ந்த மாணவா்களுக்குப் பாடம் நடத்தி வந்த கத்தாரி, பயங்கரவாதக் கும்பலுக்கு முக்கிய ஆதாரமாக இருந்தாா். கரடுமுரடான மலைப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு அவா் வழிகாட்டியிருக்கலாம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்தக் கைது தொடா்பான வழக்கு விசாரணை நிலையில் இருப்பதால், கூடுதல் தகவலைத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனா். காஷ்மீா் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத ஆதரவு அமைப்பைத் தகா்ப்பதில் இந்தக் கைது நடவடிக்கை முக்கிய நகா்வாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பஹல்காம் தாக்குதல் சதித் திட்டம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கு என்ஐஏ-க்கு மாற்றப்படலாம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக இருவரை ஏற்கெனவே என்ஐஏ கைது செய்துள்ளது.