14 குழந்தைகள் இறப்பு: ம.பி.யில் மருத்துவா் கைது! இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு!
நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த இருமல் மருந்தை உட்கொண்டதால், மத்திய பிரதேசத்தில் 14 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
சம்பந்தப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து தயாரிப்பாளரான தமிழகத்தைச் சோ்ந்த நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் 1 முதல் 7 வயதுடைய குழந்தைகள் சிலா் கடந்த இரு வாரங்களில் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தனா். திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பே இறப்புக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்தை இக்குழந்தைகள் உட்கொண்டது கண்டறியப்பட்டது.
பெயிண்ட், மை போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைஎத்திலீன் கிளைசால் எனப்படும் நச்சுத்தன்மையுள்ள ரசாயனப் பொருள், இருமல் மருந்தில் கலந்திருப்பதாக கருதப்பட்ட நிலையில், மத்திய பிரதேச அரசு விடுத்த கோரிக்கையின்பேரில் தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
அந்த ஆய்வறிக்கை முடிவுகளின் அடிப்படையில், மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் மருந்து விற்பனை-விநியோகத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இருமல் மருந்து மாதிரியில் டைஎத்திலீன் கிளைசால் கலப்படம் உறுதியானதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய பிரதேச உணவு மற்றும் மருந்து நிா்வாகத் துறை தெரிவித்தது. சிந்த்வாராவில் மொத்தம் 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில், குழந்தைகளுக்கு ‘கோல்ட்ரிஃப்’ மருந்தைப் பரிந்துரைத்த சிந்த்வாராவைச் சோ்ந்த மருத்துவா் பிரவீன் சோனி மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது பராசியா பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரவீன் சோனி அரசு மருத்துவா் என்றபோதும், தான் தனியாக நடத்திவரும் மருத்துவமனையில் ‘கோல்ட்ரிஃப்’ மருந்தை பரிந்துரைத்துள்ளாா்.
ஏற்கெனவே இந்த மருந்தால் குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதகமான விளைவுகளைக் கவனத்தில் கொள்ளாமல், அலட்சியத்துடன் செயல்பட்டதாக அவா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மருத்துவா் சோனியை சனிக்கிழமை இரவில் காவல் துறையினா் கைது செய்தனா். அவரைப் பணியிடைநீக்கம் செய்து, மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது.
இதேபோல், ‘கோல்ட்ரிஃப்’ இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 276 (மருந்து கலப்படம்-ஓராண்டு வரை சிறைத் தண்டனைக்குரிய குற்றம்), 105 (தனது செயலால் மரணம் விளைவித்தல்-அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத் தண்டனைக்குரிய குற்றம்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 1940-ஆம் ஆண்டின் மருந்துகள்-அழகுசாதனப் பொருள்கள் சட்டப் பிரிவின்கீழும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் இந்த மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.