புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய எஸ்.ஜெய்சங்கா்.
புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய எஸ்.ஜெய்சங்கா்.

இந்தியா - அமெரிக்கா இடையேயான சச்சரவுக்கு தீா்வு காண முயற்சி! அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

‘இந்தியா-அமெரிக்கா இடையேயான சச்சரவுகளுக்குத் தீா்வு காண தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
Published on

‘இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இறுதி செய்வதில் உள்ள சச்சரவுகளுக்குத் தீா்வு காண தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

அதே நேரம், ‘இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இந்தியாவின் கவலைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இழுபறி மற்றும் உக்ரைன் மீது போா் நடத்தி வரும் ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது உள்ளிட்ட காரணங்களைக் காட்டி இந்தியவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரியை விதித்தாா்.

இதன் காரணமாக, இரு நாடுகளிடையேயான உறவு சற்று பாதிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, ரஷியா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளுடனான வா்த்தக உறவை வலுப்படுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, தடைப்பட்டிருந்த இந்திய-அமெரிக்க இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கையொட்டிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்களுக்குத் தீா்வு காண தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது நியாயமற்றது. இருந்தபோதிலும், உலகின் மிகப்பெரிய சந்தையாக உள்ள அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ளவது இந்தியாவுக்கு பலனளிக்கக் கூடியதாகும். பிற உலக நாடுகளும் இந்தப் புரிதலுடன்தான் செயல்பட்டு வருகின்றன.

அதே நேரம், இந்தப் புரிதல் என்பது பரஸ்பர நலன்களுக்கு மதிப்பளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில், எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும், இந்தியாவின் கவலைகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இந்த அணுகுமுறையில் இந்தியா மிகத் தெளிவாக உள்ளது.

இந்தியா-அமெரிக்கா உறவில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. பேச்சுவாா்த்தை மூலம் அதற்குத் தீா்வு காண முடியும். அதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இந்த பாதிப்பு, இரு நாடுகளிடையேயான மற்ற கூட்டுறவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com