
மேற்கு வங்கத்தில் பெய்துவரும் தொடர் கனமழையால் டார்ஜிலிங்கின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் மமதா பானர்ஜி நாளை (அக். 6) பார்வையிடவுள்ளார்.
வடக்கு மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து நீர்வழித் தடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். நிலச்சரிவுகள் நேரிட்டுள்ள டார்ஜிலிங், மிரிக், ஜஸ்பிர்கான், சர்சாலி, நாக்ரகட்டா, காவ்ன் ஆகிய பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் உள்ளூர் மக்களும் அவர்களுக்கு உதவி வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, மிரிக் பகுதியில் 11 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
டார்ஜிலிங் பகுதியில் 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நாக்ரகட்டா அருகேவுள்ள தார் கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கிய வீடுகளில் இருந்து 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
தொகையைக் குறிப்பிடாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி நிவாரணம் அறிவித்துள்ளார். டார்ஜிலிங் பகுதி சுற்றுலாத் தலம் என்பதால், நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட முதல்வர் மமதா நாளை (அக். 6) டார்ஜிலிங் செல்லவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.