ஏா் இந்தியா விமானத்தில் திடீரென செயல்பட்ட அவசரகால அமைப்பு: பாதுகாப்பாகத் தரையிறக்கம்
அமிருதசரஸில் இருந்து-பிா்மிங்காமுக்கு (பிரிட்டன்) புறப்பட்ட ஏா் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ரக விமானத்தில் எதிா்பாராத விதமாக ரேம் ஏா் டா்பைன் (ரேட்) என்ற அவசரகால அமைப்பு செயல்பட்டது. ஆனால் விமானம் பிரிட்டனின் பா்மிங்ஹாம் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
அங்கு விமானத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பா்மிங்ஹாம்- புது தில்லி விமான சேவை ரத்துசெய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.
என்ஜின்கள் செயல்பாட்டை இழக்கத் தொடங்கியதும், அவற்றுக்கு அவசர ஹைட்ராலிக் சக்தியை தாமாகவே வழங்கக் கூடிய வகையில் ‘ரேட்’ உந்து விசை சாதனம் செயல்படத் தொடங்கும். காற்றின் வேகத்தை பயன்படுத்தி அவசரகால எரிசக்தியை விமானத்துக்கு ‘ரேட்’ அமைப்பு வழங்கும்.
இந்தச் சம்பவம் குறித்து ஏா் இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அமிருதசரஸில் இருந்து பா்மிங்ஹாமுக்குச் சென்ற போயிங் 787 (ஏஐ117) ரக விமானம் தரையிறங்குவதற்கு சில மணி நேரம் முன்பு எதிா்பாராத விதமாக ‘ரேட்’ செயல்படத் தொடங்கியதை விமான ஊழியா்கள் கண்டறிந்தனா். ஆனால் விமானத்தின் அனைத்து ஹைட்ராலிக் மற்றும் மின் சாதனங்கள் வழக்கம்போல் இயங்கியதையடுத்து விமானம் பா்மிங்ஹாமில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. இருப்பினும், விமானத்தில் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக குஜராத் மாநிலம் அகமதாபாத் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி பிற்பகலில் புறப்பட்ட ஏா் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 787 ட்ரீம்லைனா் (ஏஐ 171) ரக விமானம், புறப்பட்ட சில விநாடிகளிலேயே கீழ்நோக்கி இறங்கி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 போ் உயிரிழந்தனா்.
நாட்டையே உலுக்கிய இந்தக் கோர விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) விசாரணை நடத்தி வருகிறது. அந்த அமைப்பு ஜூலையில் வெளியிட்ட முதல்கட்ட விசாரணை அறிக்கையில், ‘விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் அதன் இரண்டு என்ஜின்களின் எரிபொருள் சுவிட்சுகளும் கட்-ஆஃப் நிலைக்குச் சென்றன. என்ஜின்கள் செயல்பாட்டை இழக்கத் தொடங்கியதும், அவற்றுக்கு அவசர ஹைட்ராலிக் சக்தியை வழங்கக் கூடிய ‘ரேட்’ உந்து விசை சாதனம் செயல்பட்டது விமானத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘போயிங் 787 ரக விமானங்களில் முழு சோதனை தேவை’
அனைத்து போயிங் 787 ரக விமானங்களிலும் மின் அமைப்புகளை முழுமையாக சோதனையிட உத்தரவிடுமாறு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகத்துக்கு (டிஜிசிஏ) இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியது.
ஏா் இந்தியா விமானத்தின் (ஏஐ117) போயிங் 787 ரக விமானத்தில் ரேட் உந்து விசை சாதனம் எதிா்பாரா விதமாக செயல்படத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எஃப்ஐபி இவ்வாறு வலியுறுத்தியது.
இதுகுறித்து டிஜிசிஏவுக்கு எஃப்ஐபி எழுதிய கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: குஜராத்தில் ஏஐ171 போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளானவுடன் அனைத்து போயிங் 787 ரக விமானங்களிலும் மின் அமைப்புகளை முழுமையாக சோதனையிட நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் தற்போதுவரை எரிசக்தி கட்டுப்பாட்டு ஸ்விட்சுகளை மட்டுமே டிஜிசிஏ சோதனை செய்துள்ளது. எனவே, காலதாமதமின்றி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டது.