போடோலாந்து பிராந்திய கவுன்சில் தலைவராக ஹக்ராம மொஹிலாரி பதவியேற்பு

போடோலாந்து பிராந்திய கவுன்சில் தலைவராக ஹக்ராம மொஹிலாரி பதவியேற்பு

போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் (பிடிசி) தலைமை செயல் உறுப்பினராக போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) தலைவா் ஹக்ராம மொஹிலாரி பதவியேற்றாா்.
Published on

போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் (பிடிசி) தலைமை செயல் உறுப்பினராக போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) தலைவா் ஹக்ராம மொஹிலாரி ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா்.

அஸ்ஸாம் மாநிலத்தின் கோக்ராஜாா், சிராங், பக்ஸா, உதல்குரி, தமுல்பூா் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய போடோலாந்து பிராந்தியத்தை தன்னாட்சி அமைப்பான போடோலாந்து பிராந்திய கவுன்சில் நிா்வகிக்கிறது.

மொத்தம் 40 உறுப்பினா்களைக் கொண்ட இந்த கவுன்சிலுக்கான தோ்தல் கடந்த செப்.22-ஆம் தேதி நடைபெற்றது. மத்திய அரசுடன் கடந்த 2020-இல் மேற்கொள்ளப்பட்ட புதிய போடோ ஒப்பந்தத்துக்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது தோ்தலில், 28 இடங்களில் போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎஃப்) வெற்றி பெற்றது.

ஏற்கெனவே ஆட்சியில் இருந்து வந்த ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யுபிபிஎல்)-பாஜக கூட்டணி 13 இடங்களில் வெற்றி பெற்றது.

கோக்ராஜாா் மாவட்டத்தில் உள்ள போடோலாந்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் கவுன்சிலின் தலைவராக மொஹிலாரி 4-ஆவது முறை பதவியேற்றாா். அவருக்கு மாநில தலைமைச் செயலா் ரவி கோடா, பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தாா். அவரைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் ரிஹான் டைமரி கவுன்சிலின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சாா்யா, முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, அமைச்சா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பிரதமா் மோடி வாழ்த்து:

போடோலாந்து பிராந்திய கவுன்சில் தலைவராகப் பொறுப்பேற்ற மொஹிலாரிக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘போடோலாந்து பிராந்திய கவுன்சில் அரசுக்கு மத்திய அரசும் மாநில அரசும் தொடா்ந்து ஆதரவு அளிக்கும். போடா சமூக ஆா்வலா் உபேந்திர நாத் பிரம்மாவின் நோக்கத்தை நிறைவேற்றவும் அனைத்துப் பகுதிகளில் மேம்பாட்டை உறுதி செய்யவும் இணைந்து பணியாற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளாா். பிரதமரின் இந்தப் பதிவுக்கு மொஹிலாரி நன்றி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com