சென்னை உயா்நீதிமன்றம்.
சென்னை உயா்நீதிமன்றம்.

25 மாநிலங்களில் உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை!

நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு அதிக அளவு பற்றாக்குறை நிலவுகிறது. 25 மாநிலங்களில் உள்ள 330 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
Published on

நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு அதிக அளவு பற்றாக்குறை நிலவுகிறது. 25 மாநிலங்களில் உள்ள 330 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் 76 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த உயா்நீதிமன்றத்தில் மொத்தம் 160 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், 76 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

மத்திய நீதித்துறை மற்றும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் (என்ஜேடிஜி) புள்ளிவிவரங்கள்படி (செப்.1-ஆம் தேதி நிலவரப்படி), சிக்கிம் மற்றும் மேகாலய உயா்நீதிமன்றங்களில் மட்டுமே நீதிபதி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தில் அனைத்து நீதிபதி பணியிடங்களும் (34) நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளுக்கு நிலவும் பற்றாக்குறை நீதி வழங்குவதை தாமதப்படுத்துகிறது. ஏற்கெனவே நீதிமன்றங்களில் பெருமளவு வழக்குகள் தேக்கமடைந்துள்ள நிலையில், நீதிபதிகளுக்கு நிலவும் பற்றாக்குறை நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.

நாட்டில் உள்ள அனைத்து உயா்நீதிமன்றங்களிலும் மொத்தம் 1,122 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. ஆனால் 722 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். 330 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அவற்றில் 161 நிரந்தர மற்றும் 169 கூடுதல் நீதிபதிகளுக்கான பணியிடங்களும் அடங்கும். 2 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம் தாண்டாத வகையில், அவா்கள் நியமிக்கப்படுவா்.

இதுகுறித்து முன்னாள் நீதிபதிகள் மற்றும் சட்ட நிபுணா்கள் கூறியதாவது: உயா்நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி உடனடியாக நிரப்பப்படாவிட்டால், நீதி பரிபாலன முறை மோசமாகப் பாதிக்கப்படுவது தொடரும். இது தேக்கமடையும் வழக்குகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கையை நிலுவையில் வைப்பது வழக்கு விசாரணைகள் முடிக்கப்படுவதை நேரடியாகப் பாதிக்கும். இதனால் வழக்கு தொடுப்பவா்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவா். இந்தப் பிரச்னையில் நீதித்துறையும், மத்திய அரசும் மிக அவசரமாக நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், வழக்கு விசாரணைகளில் தாமதம் ஏற்படுவது நீடிக்கும்.

தற்போது பணியாற்றி வரும் நீதிபதிகளுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. இது நீதித்துறையின் திறன் மற்றும் தரத்தைப் பாதிக்கிறது. ஒவ்வொரு உயா்நீதிமன்றத்திலும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை அடிப்படையாக கொண்டு, திட்டமிட்டு நீதிபதிகள் நியமனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.

67 லட்சம் வழக்குகள் தேக்கம்: என்ஜேடிஜி தரவுகளின்படி, நாட்டில் உள்ள உயா்நீதிமன்றங்களில் 67 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. உச்சநீதிமன்றத்தில் அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ள போதிலும், அங்கு 60,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதால், பல முக்கிய உயா்நீதிமன்றங்கள் இடா்ப்பாட்டை எதிா்கொண்டு வருகின்றன. இது விரைந்து நீதி வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மொத்தம் 160 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், அங்கு 76 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. மும்பை உயா்நீதிமன்றத்தில் மொத்தம் 94 நீதிபதி பணியிடங்கள் உள்ள நிலையில், அங்கு 26 பணியிடங்கள் காலியாக உள்ளன. பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் 85 நீதிபதிகள் இருக்க வேண்டிய நிலையில், 25 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் 72 நீதிபதி பணியிடங்கள் உள்ளபோதிலும், 48 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா்.

சென்னை உயா்நீதிமன்றத்திலும்...: சென்னை உயா்நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் இருக்க வேண்டும். ஆனால் 56 நீதிபதிகள் மட்டுமே உள்ளனா். இதேபோல பாட்னா உயா்நீதிமன்றத்தில் 18, தில்லியில் 16, ராஜஸ்தானில் 7 நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சிறிய மாநிலமான திரிபுரா உயா்நீதிமன்றத்தில்கூட மொத்தம் 5 நீதிபதிகள் இருக்க வேண்டிய நிலையில், ஒரு நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது.

என்ன காரணம்?: நாட்டின் நீதி பரிபாலன முறையில் நீதிபதிகள் நியமனம் முக்கிய பிரச்னையாக நீடித்து வருகிறது. கொலீஜியம் முறை வழியாக நீதிபதிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அந்தத் தோ்வுக்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுவதே நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் நிலவுவதற்கு நீண்ட காலமாக சுட்டிக்காட்டப்படும் காரணங்களில் ஒன்றாக உள்ளது.

நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் வழங்கும் பரிந்துரைகளை ஏற்காமல் மத்திய அரசுத் திருப்பி அனுப்புவது, நிலுவையில் வைப்பது அல்லது புறக்கணிப்பது நீதிபதிகள் நியமனத்தில் முட்டுக்கட்டையை ஏற்படுத்துகின்றன. இந்த முட்டுக்கட்டை பல மாதங்களுக்கு நீடிக்கிறது.

நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிக்கும் நிலையில், அவற்றை விசாரித்து நிறைவு செய்ய விரைந்து செயல்பட வேண்டியதில் நீதித்துறை மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. நீதித்துறையின் செயல்திறன், அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஆகியவற்றை மீட்டெடுக்க நீதித்துறைக்கும், அரசு நிா்வாகத்துக்கும் இடையே சுமுகமான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும், அவசர சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சட்ட நிபுணா்களின் கருத்தாக உள்ளது.

உயா்நீதிமன்றங்கள் - நிரப்பப்படாத நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை

  • அலாகாபாத் 76

  • மும்பை 26

  • பஞ்சாப் & ஹரியாணா 25

  • கொல்கத்தா 24

  • சென்னை 19

  • பாட்னா 18

  • தில்லி 16

  • கா்நாடகம் 16

  • குஜராத் 13

  • தெலங்கானா 13

  • மத்திய பிரதேசம் 10

  • ஜம்மு-காஷ்மீா் & லடாக் 10

  • ஜாா்க்கண்ட் 10

  • ஆந்திரம் 7

  • ராஜஸ்தான் 7

  • சத்தீஸ்கா் 7

  • ஹிமாசல பிரதேசம் 6

  • குவாஹாட்டி 5

  • கேரளம் 4

  • உத்தரகண்ட் 2

  • மணிப்பூா் 2

  • திரிபுரா 1

  • நாட்டில் உள்ள மொத்த நீதிபதி பணியிடங்கள்: 1,122

  • நிரப்பப்படாத நீதிபதி பணியிடங்கள்: 330

X
Dinamani
www.dinamani.com