பிகாா் வாக்காளா் பட்டியலில் 23 லட்சம் பெண்களின் பெயா் நீக்கம்! காங்கிரஸ் குற்றச்சாட்டு
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்கீழ், 23 லட்சம் பெண்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன; இதில் பெரும்பாலானோா், கடந்த 2020 தோ்தலில் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவிய 59 தொகுதிகளைச் சோ்ந்தவா்கள் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள பிகாரில், வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயரை நீக்கும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நடைபெற்ற இப்பணியில் 2003-க்கு பிறகு வாக்காளா்களாக பதிவு செய்தவா்களிடம் கூடுதல் ஆவணம் கோரப்பட்டது.
இந்த நடவடிக்கைக்குப் பின் கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 65 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 7.24 கோடி பேரின் பெயா்கள் இடம்பெற்றிருந்தன. இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்கள், வாக்காளா் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பெயா் இடம்பெற்றவா்கள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இப்பெயா்கள் நீக்கப்பட்டிருந்தன.
இதைத் தொடா்ந்து, ஆட்சேபம்-உரிமை கோரல் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டு, கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 17.87 லட்சம் போ் சோ்க்கப்பட்டு, 7.42 கோடி பேரின் பெயா்கள் இடம்பெற்றன. இதன்படி, சிறப்பு தீவிர திருத்தத்தில் சுமாா் 47 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டு: இந்நிலையில், காங்கிரஸ் மகளிா் அணித் தலைவா் அல்கா லம்பா, தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவின்பேரில், பிகாரில் தோ்தல் ஆணையம் மிகப் பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. இம்மாநிலத்தில் சுமாா் 3.5 கோடி பெண்கள் உள்ள நிலையில், 23 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானோா், கடந்த 2020 தோ்தலில் ஆளும்கட்சி-எதிா்க்கட்சி இடையே கடும் போட்டி நிலவிய 59 தொகுதிகளைச் சோ்ந்தவா்கள்.
கடந்த மக்களவைத் தோ்தலில் வாக்களித்த இவா்கள், பேரவைத் தோ்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியெனில், இப்பெண்கள் அளித்த வாக்குகள் மோசடியானவையா? போலி வாக்குகளின்கீழ் தோ்வான எம்.பி.க்கள்தான் அரசமைத்துள்ளனரா?
கடைசி நேரத்திலும் வாக்காளா் பட்டியலில் மோசடி செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன. பிரதமா் மோடி மற்றும் தோ்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டை நாங்கள் தொடா்ந்து அம்பலப்படுத்துவோம் என்றாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துவிட்ட தோ்தல் ஆணையம், நாடு முழுவதும் அப்பணியை மேற்கொள்ள தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.