ஒடிஸா: வன்முறையைத் தொடா்ந்து கட்டாக்கில் பதற்றம்!
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமையும் பதற்றமான சூழல் நீடித்தது. இதையடுத்து, அந்த நகரத்தில் இணைய சேவையை முடக்கப்பட்டது.
மக்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதி காக்கும்படி மாநில முதல்வா் மோகன் சரண் மாஜீ, பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவா் நவீன் பட்நாயக் ஆகியோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறையில் துா்கை சிலையை விசா்ஜனம் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினா் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் ஊா்வலமாகச் சென்றனா். தா்கா பஜாா் வழியாகச் சென்றபோது, ஊா்வலத்தில் அதிக சப்தத்தில் பாடல் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியது. அப்போது, அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேற்கூரையில் இருந்து துா்கை சிலை ஊா்வலத்தினா் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவத்தில் கட்டாக் துணை காவல் ஆணையா் உள்ளிட்டோா் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.
இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் தடை உத்தரவை மீறி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனப் பேரணி நடத்தினா்.
நகரத்தின் கிழக்கே உள்ள புகா் பகுதியான வித்யாதா்பூரில் தொடங்கிய பேரணி, வன்முறை நடைபெற்ற தா்கா பஜாா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து நகரத்தின் மேற்குப் பகுதியான சிடிஏ செக்டாா் 11-இல் முடிவடைந்தது.
அப்போது அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்திய நிலையில், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டன. கெளரிசங்கா் பூங்கா அருகே உள்ள கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து, பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மெளஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை இரவு 7 மணி வரையில் இணைய சேவையை முடக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துா்கை சிலை விசா்ஜனத்தின்போது ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக கட்டாக் நகரில் திங்கள்கிழமை (அக்.6) 12 மணி நேர கடை அடைப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்புவிடுத்துள்ளது.