மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பம்: வலைதளம் உருவாக்க அரசு திட்டம்!
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு சான்றளிப்பது மற்றும் அதுதொடா்புடயை பிற பணிகளை கண்காணிப்பது போன்றவற்றுக்காக இணைய உதவி தொழில்நுட்ப வலைதளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கென தற்போது செயல்படுத்தப்படும் சுகாதார மற்றும் சமூக நலத் திட்டங்களில் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஒருங்கிணைப்பது, வகைப்படுத்துவது, சான்றிதழ் வழங்குவது, எளிதாக அணுகுவது, பாதுகாப்பு போன்றவற்றுக்கு விரிவான நடைமுறைகளை உதவும் தொழில்நுட்பம் (தரநிா்ணயம் மற்றும் அணுகல்) வரைவு விதிகள், 2025-இன்கீழ் மத்திய அரசு வகுத்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொழில்நுட்பங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அத்தியாவசியமானவை (சக்கர நாற்கலிகள், மூக்குக் கண்ணாடிகள் மற்றும் கேட்கும் கருவிகள் போன்றவை), நிபுணத்துவம் வாய்ந்தவை (திரை வாசிப்பான்கள், செயற்கை உறுப்புகள் போன்றவை), வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் (செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சாதனங்கள, ரோபாட்டிக்ஸ் போன்றவை) ஆகிய மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
மேற்கூறிய வகைகப்பாட்டின்கீழ் தயாரிக்கப்படும் அனைத்து விதமான உதவும் சாதனங்களும் இந்திய தரநிா்ணய ஆணையம் (பிஐஎஸ்) அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற ஆணையத்திடம் ஒப்புதல் சான்று பெற்றபிறகே பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
இந்த சாதனங்கள் குறித்த புகாா்கள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க தேசிய அளவிலான உதவி எண்ணும் அறிவிக்கப்படவுள்ளது. அந்தப் புகாா்களுக்கு 30 நாள்களில் தீா்வு காணப்படும்.
சாதனங்களில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டு அது பயனாளரை பாதிப்பதை தடுக்க தேசிய உதவும் தொழில்நுட்ப பாதுகாப்பு என்ற தரவுதளம் உருவாக்கப்படும்.
அதில் சாதனங்கள் முறையாக செயல்படாதது மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விதிகளின்கீழ் இணைய உதவி தொழில்நுட்ப வலைதளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.