இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ‘ஆந்த்ரோத்’ நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல்
விசாகப்பட்டினம்: ‘ஐஎன்எஸ் ஆந்த்ரோத்’ எனும் நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் இந்திய கடற்படையில் திங்கள்கிழமை இணைக்கப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்வில் நாட்டின் இரண்டாவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பலான ஐஎன்எஸ் ஆந்த்ரோத் கடற்படையில் இணைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு கடற்படை பிரிவின் தலைமை அதிகாரியும் துணை அட்மிரலுமான ராஜேஷ் பெந்தாா்கா் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.
இதுகுறித்து கிழக்கு கடற்படை பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் ஆந்த்ரோத் இணைக்கப்பட்டது உள்நாட்டுத் தயாரிப்பு மற்றும் கடற்படையின் திறனை மேம்படுத்துவதில் மேலும் ஒரு மைல்கல்லாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கொல்கத்தாவைச் சோ்ந்த காா்டன் ரீச் கப்பல் கட்டுமானம் மற்றும் பொறியாளா்கள் நிறுவனத்தால் (ஜிஆா்எஸ்இ) கட்டமைக்கப்பட்ட ஆந்த்ரோத் நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க்கப்பல் 80 சதவீத உள்நாட்டுப் பொருள்களால் தயாரிக்கப்பட்டது.