நாட்டில் நெல் சாகுபடி பரப்பு 441.58 லட்சம் ஹெக்டேராக அதிகரிப்பு: மத்திய அரசு
புது தில்லி: நாட்டில் நெல் சாகுபடி பரப்பளவு 441.58 லட்சம் ஹெக்டேராக 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய விவசாயத் துறை தெரிவித்துள்ளது.
அந்தத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், நிகழாண்டு அக்.3-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, நாட்டில் காரீஃப் பயிா்கள் சாகுபடி குறித்த விவரம் வெளியிடப்பட்டது.
அதன்படி, அனைத்து காரீஃப் பயிா்களின் மொத்த சாகுபடி பரப்பு 1,121 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,114 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
நிகழாண்டு அக்.3 வரை, நெல் சாகுபடி பரப்பளவு 441.58 லட்சம் ஹெக்டேராக 1.35 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 435.68 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
கடந்த ஆண்டு பருப்பு வகைகளின் சாகுபடி 119.04 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், இது தற்போது 120.41 லட்சம் ஹெக்டேராக சிறிதளவு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு 112.97 லட்சம் ஹெக்டேராக இருந்த பருத்தி சாகுபடி பரப்பு, தற்போது 110.63 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. நிகழாண்டு கரும்பு சாகுபடி பரப்பு 59.07 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 57.22 லட்சம் ஹெக்டேராக இருந்தது.