
தேசிய ஜனநாயக கூட்டணி
அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள பிகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதீஷ்குமார் தலைமையில் மீண்டும் ஆட்சிக்கு வருவதை எதிர்நோக்கி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி காத்திருக்கிறது.
பலமான அம்சங்கள்
நிதீஷ்குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதால் இக்கூட்டணிக்கு பல்வேறு சாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன. பிகாரில் நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிதீஷ்கு மார் மாநிலத்தில் மிகவும் செல்வாக்கான அரசியல் தலைவராக இருக்கிறார். அவர் தனது 20 ஆண்டுகால ஆட்சியில் வீடுகளுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம், கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் விநியோகம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகளை அளிப்பதாக வாக்குறுதி அளித்திருப்பது ஆகியவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமான அம்சங்களாத் திகழ்கின்றன.
அதிகரிக்கப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள். 75 லட்சம் பெண்களுக்கு தலா ரூ.10,000 உ தவித்தொகை, உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்கள் போன்றவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களிடையே செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளன.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் போன்றவற்றின் அமைப்பு ரீதியான தொண்டர் படை இக்கூட்டணிக்கு பலம் சேர்க்கிறது.
பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கிவைத்துள்ள வளர்ச்சி மற்றும் உள்கட் டமைப்புத் திட்டங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் வலுவை அளிப்பது குறிப்பிடத்தக்கது.
பலவீனமான அம்சங்கள்
நிதீஷ்குமார் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் அவரிடம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சலிப்பு ஒரு பலவீனமாகும். இதனால் கணிசமான மக்களிடையே ஆட்சிக்கு எதிரான அதிருப்தி காணப்படுகிறது.
மக்களி தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, உயர் ஜாதியினரின் கட்சியாக மக்களிடையே பார்க்கப்படுவது இக்கூட்டணிக்கு எதிர்மறையான அம்சமாக உள்ளது.
வாய்ப்புகள்
முதல்வர் நிதீஷ்குமாருக்கு வயதாகிவிட்ட நிலையில் அவருக்கு அடுத்தபடியாக ஐக்கிய ஜனதா தளத்தில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் உருவாகவில்லை. இந்த அம்சத்தை அதன் கூட்டணிக் கட்சியான பாஜக நன்கு பயன்படுத்திக் கொண்டு தனது தலைவர்களை வளர்த்தெடுக்க முடியும்.
சவால்கள்
மாற்றுக் கட்சியினரை பாஜக பெருமளவில் சேர்த்துக் கொள்வது அதன் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அம்சமாக இருந்த மேலிட கலாசாரம் தற்போது பாஜகவின் அடையாளமாக மாறியிருப்பது மாநிலத் தலைவர்களிடையே முடிவு எடுக்கும் அம்சத்தைப் பறித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளதால் அதன் ஹிந்துத்துவ அடையாளம் இக்கூட்டணியிடம் இருந்து முஸ்லிம் வாக்காளர்களை விலகியிருக்கச் செய்துள்ளது.
இண்டி கூட்டணி
பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி நேரடியாக மோத உள்ளது.
பலமான அம்சங்கள்
பிகார் வாக்காளர்களில் சுமார் 30 சத வீதமாக உள்ள முஸ்லிம் - யாதவ் சமூக வாக்கு வங்கியை ஆர்ஜேடி தன் வசம் வைத்துள்ளது.
ஆர்ஜேடி கட்சி நிறுவனர் லாலு பிரசாத் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், அவரது மகன் தேஜஸ்வி யாதவை தனது தலைவராக அக்கட்சி முன்னிறுத்தியுள்ளது. பிகார் இளைஞர்களிடையே இளம் தலைவரான தேஜஸ்விக்கு கணிசமான ஆதரவு காணப்படுகி றது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிகாரில் நடத்திய வாக்காளர் உரிமை யாத்திரை இண்டி கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களை உற்சாக்ப்படுத்தியுள்ளது.
பலவீனமான அம்சங்கள்
பிகாரில் இண்டி கூட்டணியில்பெரிய கட்சியான ஆர்ஜேடி கட்சி, லாலு பிரசாத், தேஜஸ்வி மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கட்டுப்படுத்தப்படுவது பெரிய பலவீனமாகும். லாலு மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு ஊழல் வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர்.
ஆர்ஜேடி கட்சித் தொண்டர்களிடையே தேஜஸ்விக்கு பெரிய அளவில் செல்வாக்கு இருந்தபோதிலும் அவரது சகோதரர் தேஜ் பிரதாப் உள்ளிட்ட குடும்பத்தினர் அவ்வப்போது பல்வேறு சச்சரவுகளை ஏற்படுத்து கின்றனர். இதனால் கட்சி மற்றும் கூட்டணி விவகாரங்களைக் கையாள்வதைவிட சொந்தக் குடும்பத்தை கவனிப்பதிலேயே தேஜஸ்வியின் நேரம் வீணாகிறது.
வாய்ப்புகள்
இண்டி கூட்டணியின் முகமாக இளம் தலைவர் தேஜஸ்வி இருக்கும் நிலையில், வாக்காளர்களிடையே இந்தக் கூட்டணியால் வசீகரமான தோற்றத்தை அளிக்க முடியும். மாநிலத்தின் முக்கியத் தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் பிற மாநிலங்களுக்கு குடிபெயரும் பிரச்னை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவற்றை தன்னால் சிறப்பாக கையாள முடியும் என்று தேஜஸ்வியால் வாக்காளர்களிடையே தன்னை முன்னிலைப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அக்கூட்டணி சொந்தம் கொண்டாடுகிறது. எனினும், அப்போது கூட்டணி அரசில் ஆர்ஜேடி இடம்பெற்றிருந்தது அக் கட்சிக்கு சாதகமான அம்சமாகும். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு பல்வேறு சமூகங்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு அக்கட்சி உரிமை கோர முடியும்.
ஒருமித்த கருத்துடைய காங்கிரஸ், சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி, நிதீஷ்குமார் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இடம்பெயர்ந்தது ஆகியவை முஸ்லிம் வாக்குகள் பெருவாரியான அளவில் இண்டி கூட்டணிக்கு கிடைக்கும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
சவால்கள்
ஆட்சியில் இருந்து இறங்கி நீண்ட காலமாவதால் ஆர்ஜேடி கட்சிப் பிரமுகர்களின் விருப்பங்களைச் சமாளிப்பதும், கூட்டணிக் கட்சிகளிடையே உரசல் ஏதுமின்றி சுமுகமாகச் செல்ல வேண்டிய நிலையும் சவாலான அம்சமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.