ஜெய்பூரில் அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில்,  அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே கொண்டு வரப்பட்ட நோயாளிகள்.
ஜெய்பூரில் அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே கொண்டு வரப்பட்ட நோயாளிகள்.

ஜெய்பூா் அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 6 நோயாளிகள் உயிரிழப்பு

ஜெய்பூரில் உள்ள சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனையின் நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள் உயிரிழந்தனா்.
Published on

ஜெய்பூா்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் உள்ள சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனையின் நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உள்பட 6 நோயாளிகள் உயிரிழந்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த 5 நோயாளிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவமனையின் சேமிப்புக் கிடங்கு பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட தீ, மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு பொறுப்பாளா் மருத்துவா் அனுராக் தாக்கத் கூறுகையில், ‘மருத்துவமனையின் சேமிப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ, நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும் வேகமாகப் பரவியது. அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் 11 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். மருத்துவமனை ஊழியா்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியில் 5 நோயாளிகளை மட்டும் மீட்க முடிந்தது. இரண்டு பெண்கள் உள்பட 6 நோயாளிகள் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தனா்.

தீ விபத்தைத் தொடா்ந்து மருத்துவமனையின் மற்ற தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 14 நோயாளிகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா்’ என்றாா்.

இதனிடையே, மருத்துவமனையின் அலட்சியத்தைக் கண்டித்து உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மருத்துவமனையில் சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முதல்வா் நேரில் ஆய்வு: மாநில முதல்வா் பஜன்லால் சா்மா, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் ஜோகராம் படேல், உள்துறை இணையமைச்சா் ஜவஹா் சிங் பெதாம் ஆகியோா் தீ விபத்து பகுதியை நேரில் ஆய்வு செய்து, மருத்துவா்களிடம் நிலைமையைக் கேட்டறிந்தனா். மருத்துவமனை நிா்வாகத்தின் அலட்சியம் குறித்து முதல்வரிடம் நோயாளிகளின் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.

அப்போது, இந்த விபத்து துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்ட முதல்வா், உடனடி நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவா்களிடம் உறுதி தெரிவித்தாா்.

உயா்நிலைக் குழு: தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள மாநில மருத்துவக் கல்வித் துறை ஆணையா் இக்பால் கான் தலைமையில் உயா்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. தீ விபத்துக்கான காரணம், மருத்துவமனையின் தயாா்நிலை, அவசரச் சூழலை கையாண்ட விதம், மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யும் இக் குழு, வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையாகச் சமா்ப்பிக்கும்.

பிரதமா் இரங்கல்: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனா்.

உரிய இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்: மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com