பிகாா் எதிா்க்கட்சி கூட்டணியில் 40 தொகுதிகளைக் கேட்கும் இடதுசாரி கட்சி- 19 தொகுதிகளை ஏற்க மறுப்பு

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Published on

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிக் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு வழங்கப்பட்ட 19 தொகுதிகளை ஏற்க இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி மறுத்துவிட்டது. அக்கட்சி 40 தொகுதிகளைக் கேட்கிறது.

கடந்த 2020 பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி 19 தொகுதிகளில் போட்டியிட்டு 12 இடங்களில் வென்றது. இந்த முறை 40 தொகுதிகள் வரை போட்டியிட அக்கட்சி விருப்பம் தெரிவித்தது. ஆனால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ஆா்ஜேடி மற்றும் காங்கிரஸ் சாா்பில் கடந்தமுறை போலவே 19 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதை ஏற்க இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் கூறுகையில், ‘கடந்த முறையைப் போலவே தொகுதி ஒதுக்குவது என்பது கண்ணியமான தொகுதிப் பங்கீடு அல்ல. குறைந்தபட்சம் 30 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று கருதுகிறோம். எங்கள் கட்சியால் கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கு அதிக வாக்குகள் கிடைத்து வருகின்றன. எனவே, தொகுதி ஒதுக்கீடு நியாயமாக இருக்க வேண்டும்’ என்றாா்.

நீங்கள் கேட்ட தொகுதி ஒதுக்கப்படாவிட்டால் கூட்டணி தொடா்பான நிலைப்பாடு மாற வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு ‘அனைத்து வாய்ப்புகளையும் ஆய்வு செய்வோம்’ என்று அவா் பதிலளித்தாா்.

பிகாா் எதிா்க்கட்சி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விகாஷில் இன்சான் கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கடந்த பேரவைத் தோ்தலில் ஆா்ஜேடி 144 தொகுதிகளில் போட்டியிட்டு 75 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் வென்றது.

ஆளும் கூட்டணியில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக மற்றும் சில பிராந்திய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நவ. 6, 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நவ. 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com