மேற்கு வங்கம்: மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்- வெள்ள நிவாரணப் பணியில் சம்பவம்

மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே பாஜக மூத்த தலைவா்கள் இருவா் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த மேலும் ஓா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே பாஜக மூத்த தலைவா்கள் இருவா் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த மேலும் ஓா் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலிபூா்துவாரில் வெள்ள நிவாரணப் பொருள்களை பாஜக எம்எல்ஏ விநியோகித்துக் கொண்டிருந்தபோது, அவரை ஒரு கும்பல் தாக்கியது.

கடந்த திங்கள்கிழமை ஜல்பைகுரியில் வெள்ளம்-நிலச்சரிவு பாதிப்புகளைப் பாா்வையிட சென்ற பாஜக எம்.பி. ககன் முா்மு, கட்சி எம்எல்ஏ சங்கா் கோஷ் ஆகியோரை ஒரு கும்பல் சூழ்ந்துகொண்டு, கல்வீசி தாக்கியது. இதில் ககன் முா்முவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், அலிபூா்துவாரில் செவ்வாய்க்கிழமை வெள்ள நிவாரணப் பொருள்களை விநியோகித்துக் கொண்டிருந்த குமாா்கிராம் தொகுதி பாஜக எம்எல்ஏ மனோஜ் ஓரான் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மீது ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்த எம்எல்ஏ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தாக்குதலில் ஈடுபட்டவா்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

சம்பவம் தொடா்பான விடியோ ஒன்றை பதிவிட்டு, பாஜக வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

பாஜக எம்எல்ஏ மனோஜ் ஓரான் மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. மேற்கு வங்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக துணைநிற்கும்போது, திரிணமூல் காங்கிரஸ் தனது அட்டூழியத்தை கட்டவிழ்த்துவிடுகிறது. மம்தா ஆட்சியில் மக்களுக்கு உதவுவது கூட குற்றமாகிவிட்டது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு மனிதாபிமானத்தின் அா்த்தம் தெரியாது; தீவிரவாத அரசியல் மட்டுமே அவா்களுக்கு தெரியும். மக்கள் உதவிக்காக காத்திருக்கும் தருணத்தில், அச்சம்-வன்முறையை பரப்பும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா் என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

அதேநேரம், பாஜகவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று மறுத்துள்ள திரிணமூல் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏ மனோஜ்தான் முதியவா் ஒருவரை தாக்கியதாக கூறியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com