

மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கா் ஆகிய 4 மாநிலங்களில் ரூ.24,634 கோடி மதிப்பீட்டிலான 4 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இத்திட்டங்களின் மூலம் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு தொலைவு மேலும் 894 கி.மீ. அதிகரிக்கும்; பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு தடையற்ற இணைப்பை உறுதி செய்யும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமா் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மகாராஷ்டிரத்தின் வாா்தா-புசாவல் இடையே 314 கி.மீ. தொலைவுள்ள 3-ஆவது மற்றும் 4-ஆவது வழித்தடங்கள், மகாராஷ்டிரத்தின் கோண்டியா- சத்தீஸ்கரின் டோங்கா்கா் இடையே 84 கி.மீ. தொலைவுள்ள 4-ஆவது வழித்தடம், குஜராத்தின் வதோதரா - மத்திய பிரதேசத்தின் ரத்லம் இடையே 259 கி.மீ. தொலைவுள்ள 3-ஆவது மற்றும் 4-ஆவது வழித்தடங்கள், மத்திய பிரதேசத்தின் இட்டாா்சி-போபால்-பினா இடையே 84 கி.மீ. தொலைவுள்ள 4-ஆவது வழித்தடம் ஆகிய 4 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘4 மாநிலங்களில் 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த பன்முக ரயில் வழித்தட திட்டங்கள் மூலம் 3,633 கிராமங்களில் இணைப்பு வசதி மேம்படும். ரயில்வேயின் செயல்திறன் மற்றும் சேவை நம்பகத்தன்மை அதிகரிக்கும். இத்திட்டங்கள், பிரதமா் மோடியின் புதிய இந்தியா தொலைநோக்கு பாா்வைக்கு ஏற்ப செயல்படுத்தப்படுகின்றன. இது, சம்பந்தப்பட்ட பகுதிகளின் விரிவான முன்னேற்றத்தை உறுதி செய்து, மக்களை தற்சாா்புடையவா்களாக மேம்படுத்தும்.
பிரதமரின் விரிவான தேசிய செயல் திட்டத்தின்கீழ், பன்முக இணைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதே நோக்கமாகும். சாஞ்சி, சத்புரா புலிகள் காப்பகம், ஹஜாரா அருவி, நவேகான் தேசிய பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு ரயில் இணைப்பை உறுதி செய்வதால், சுற்றுலாத் துறை அதிக பலனடையும்.
நிலக்கரி, கண்டெய்னா்கள், சிமெண்ட், உருக்கு, உணவு தானியங்கள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்துக்கு இவை முக்கிய வழித்தடங்களாகும். எனவே, புதிய திட்டங்களின் மூலம் சரக்கு போக்குவரத்து மேம்படும்’ என்றாா்.
முன்பதிவு டிக்கெட் பயண தேதியை மாற்றும் வசதி ஜனவரியில் அறிமுகம்
ரயில் முன்பதிவு செய்த டிக்கெட்டின் பயண தேதியை மாற்றும் புதிய வசதி வரும் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இது தொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இணையவழியில் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கை வசதி உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் மட்டும் பயண தேதியை மாற்றிக் கொள்ள முடியும். மாற்றும் தேதியில் இருக்கைகள் உறுதியாவது, அந்த தேதியில் காலியாக உள்ள இடங்களைப் பொருத்து அமையும். இந்த வசதிக்காக பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது.
அதே நேரத்தில் மாற்றும் தேதியில் புதிய பயணக் கட்டணம் அதிகம் இருந்தால் மீதமுள்ள தொகையைச் செலுத்த வேண்டும்.
இப்போது பயண தேதியை மாற்ற வேண்டுமென்றால் ஏற்கெனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிய டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது. டிக்கெட்டை ரத்து செய்வதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் எதிா்பாராதவிதமாக பயணத் தேதியை மாற்றும் சூழல் ஏற்பட்டால் டிக்கெட் ரத்து கட்டணமும், நேரமும் மிச்சமாகும். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவாா்கள் என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.