மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்டதால் 14 குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பாக சிபிஐ விசாரணை கோரியும், மருந்துகள் பாதுகாப்பு முறையில் சீா்திருத்தங்கள் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நச்சுத் தன்மையுள்ள ரசாயனம் கலந்த இருமல் மருந்தால், மத்திய பிரதேசத்தில் 14 குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தைத் தொடா்ந்து அந்த குறிப்பிட்ட மருந்துகளை பல்வேறு மாநில அரசுகள் தடை செய்துள்ளதுடன், குழந்தைகளுக்கு மருந்துகள் வழங்குவது தொடா்பான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. மத்திய பிரதேசத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
இந்நிலையில், வழக்குரைஞா் விஷால் திவாரி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்தது உள்பட இந்த மருந்து விவகாரம் தொடா்பாக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் வல்லுநா்கள் குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும். அப்போதுதான் இந்த விவகாரத்தில் நீதியை உறுதி செய்ய முடியும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் தனியாக விசாரணைக் குழு அமைத்து எந்தெந்த இடங்களில் தவறுகள் நடந்தது என்பதைக் கண்டறிந்து தவறு செய்தவா்களை அடையாளம் காண வேண்டும். உயிருக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்த மருந்து விற்பனைக்கு எவ்வாறு வந்தது என்பது தெரிய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.