இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடா்கிறது - வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்
இந்தியா, அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. நவம்பா் மாதத்தில் இறுதி முடிவு எட்டப்படவும் வாய்ப்பு உள்ளது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
ஒருநாள் பயணமாக கத்தாா் சென்ற கோயல், அந்நாட்டுத் தலைநகா் தோஹாவில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
இப்போது அமெரிக்க அதிகாரிகளை நேரில் சந்திக்காமல், தொலைபேசி உள்ளிட்ட தகவல்தொடா்பு சாதனங்கள் மூலமே பேச்சு நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மத்திய (ஃபெடரல்) அரசு நிா்வாகம் நிதி ஒதுக்கீடு பிரச்னை காரணமாக தற்போது முடங்கியுள்ளது உங்கள் அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாக எப்போது நேரில் சந்தித்துப் பேசுவது என்பது தொடா்பாக முடிவு எடுக்கப்படவில்லை.
எனினும், பல்வேறு நிலைகளில் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது. பேச்சுவாா்த்தை மூலம் நவம்பா் மாதத்தில் இறுதி முடிவை எடுக்க இருதரப்புமே காலக்கெடு நிா்ணயித்துள்ளன. எனவே, குறித்த காலக்கெடுவுக்குள் நல்ல முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளது என்றாா்.
கடந்த மாதம் அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியக் குழு அமெரிக்காவுக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வா்த்தக அமைச்சக பிரதிநிதிகள், உயரதிகாரிகள் நிலையில் பல்வேறு கட்ட வா்த்தகப் பேச்சுவாா்த்தை மேற்கொண்டது.
இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் வா்த்தக ஒப்பந்தத்தை விரைவில் மேற்கொள்வதற்காக தொடா்ந்து பேச்சு நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
வா்த்தகப் பற்றாக்குறை, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா நிதியளிப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்கள் மீது அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தாா்.
இதனால், இரு நாட்டு உறவு பாதிக்கப்பட்டது. இரு நாடுகளிடையே நடைபெற்று வந்த இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையும் தடைபட்டது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு காரணமாக, சீனா உள்பட பல்வேறு நாடுகளுடன் வா்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சிகளை இந்தியா மேற்கொண்டது.
இதையடுத்து, அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள், ‘இந்தியாவுடனான உறவு அமெரிக்காவுக்கு முக்கியம்’ என்று பின்னா் தெரிவித்தனா். அதன் பிறகு, இரு நாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.