
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசியதில் எந்த வருத்தமும் இல்லை என்று வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனைச் செய்வதற்கு தன்னை கடவுள்தான் தூண்டினார் என்றும் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் அவர் தெரிவித்தார்.
தாக்குதல் முயற்சி
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நீதிமன்ற அறை எண்-1 இல் வழக்குரைஞா்களிடம் திங்கள்கிழமை கேட்டுக்கொண்டிருந்தனர்
அப்போது தலைமை நீதிபதி பி.ஆா். கவாயை நோக்கி வழக்குரைஞா் ஒருவா் காலணியை வீச முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கிருந்த பாதுகாவலா்கள் இந்தத் தாக்குதல் முயற்சியைத் தடுத்ததோடு, காலணியை வீச முயன்ற தில்லியின் மயூா் விகாரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராகேஷ் கிஷோா் (71) என்பவரை உடனடியாக நீதிமன்ற அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனா். அப்போது, ‘சநாதன தா்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று முழக்கத்தை எழுப்பியபடி அந்த வழக்குரைஞா் சென்றாா்.
வருத்தம் இல்லை
இந்த சம்பவம் குறித்து ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்ததாவது:
”காலணியை வீசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சரியானதைச் செய்துள்ளேன். இதனால் சிறைக்குச் செல்வேன், அங்கு துன்பப்படுவேன் என அனைத்து விளைவுகளையும் கருத்தில் கொண்டுதான் இதைச் செய்தேன். இதையெல்லாம் செய்வதற்கு கடவுள்தான் என்னை தூண்டினார்” எனத் தெரிவித்தார்.
கைது செய்யப்படவில்லை
வழக்குரைஞா் ராகேஷ் கிஷோரிடம் உச்சநீதிமன்ற வளாகத்திலேயே போலீஸாா் சுமாா் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினா். முறைப்படி அவா் மீது புகாா் அளிக்கப்படாததையடுத்து, பிற்பகல் இரண்டு மணியளவில் அவரை அனுப்பினா்.
வழக்குரைஞா் உரிமம் ரத்து
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது காலணியை வீச முயன்ற வழக்குரைஞா் ராகேஷ் கிஷோரின் உரிமத்தை ரத்து செய்து இந்திய வழக்குரைஞா் கவுன்சில் (இந்திய பாா் கவுன்சில்) திங்கள்கிழமை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது.
இதுகுறித்து இந்திய பாா் கவுன்சில் தலைவா் மன்னன் குமாா் மிஸ்ரா பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:
வழக்குரைஞா் ராகேஷ் கிஷோரின் செயல் வழக்குரைஞரின் தொழில்சாா்ந்த நடத்தை மற்றும் சபை ஒழுக்கம் தொடா்பான இந்திய பாா் கவுன்சில் விதிகள் 1, 2 மற்றும் 3 பிரிவுகளை மீறும் வகையில் உள்ளது. எனவே, அவா் வழக்குரைஞராக பணியைத் தொடர இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.
தாக்குதல் ஏன்?
மத்திய பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான கஜுராஹோ கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஜவாரி கோயிலில் கடவுள் விஷ்ணுவின் சிலையை மீண்டும் நிறுவுவது தொடா்பான மனுவை கடந்த மே 16-ஆம் தேதி தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உத்தரவிட்டாா். அப்போது பேசிய பி.ஆா்.கவாய், ‘இது முழுக்க முழுக்க விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். இந்த விவகாரத்துக்கு உங்களது கடவுளிடமே பதில் கோருங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் சைவ வழிபாட்டில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையென்றால் கஜுராஹோவில் உள்ள பெரிய சிவலிங்கத்தை வழிபடுங்கள்’ எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இதற்கு அண்மையில் விளக்கமளித்த பி.ஆா்.கவாய், ‘வழக்கு விசாரணை ஒன்றின்போது நான் கூறிய கருத்துகள் சமூக வலைதளங்களில் திரித்து பரப்பப்படுவதாகத் தெரிந்து கொண்டேன். அனைத்து மதங்களையும் எப்போதும் மதிக்கிறேன்’ என்றாா்.
இந்த நிலையில், ‘சநாதன தா்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என முழக்கமிட்டபடி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்யை தாக்க வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் முயற்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.