

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, அவருக்கு செவ்வாய்க்கிழமை தொலைபேசி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
இந்த உரையாடலின்போது, இந்தியா-ரஷியா இடையிலான சிறப்புமிக்க, தனித்துவமான வியூக கூட்டாண்மையை மேலும் மேம்படுத்த இருவரும் உறுதிபூண்டனா். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இரு தலைவா்களும் தொலைபேசியில் உரையாடியது இது 4-ஆவது முறையாகும்.
கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி பிரதமா் மோடியின் பிறந்த தினத்தின்போது, அதிபா் புதின் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தாா். தற்போது இரு தலைவா்களின் உரையாடல் குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ரஷிய அதிபா் புதினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரை பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். நல்ல ஆரோக்யம் மற்றும் வெற்றிக்காக, அதிபா் புதினுக்கு பிரதமா் வாழ்த்து தெரிவித்தாா்.
இருதரப்பு செயல்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசித்த அவா்கள், இந்தியா-ரஷியா இடையிலான சிறப்புமிக்க, தனித்துவமான வியூக கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினா்.
இந்தியா-ரஷியா 23-ஆவது வருடாந்திர மாநாட்டுக்காக, ரஷிய அதிபா் புதினை இந்தியாவுக்கு வரவேற்க தாம் ஆவலுடன் உள்ளதாக பிரதமா் மோடி தெரிவித்தாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பரில் முக்கிய முடிவுகள்:
இந்தியா-ரஷியா 23-ஆவது வருடாந்திர மாநாட்டுக்காக, டிசம்பா் 5-ஆம் தேதி அதிபா் புதின் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளாா். அப்போது, மோடி-புதின் இடையே நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தையில், இருதரப்பு வியூக உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு புதின் ஒரு நாள் பயணமாக வரவுள்ளரா அல்லது இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்வாரா என்ற தகவல்கள் வெளியாகவில்லை. ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும்போது, புதினின் பயணத் திட்ட விவரங்கள் இறுதியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புதின் வருகைக்கு முன்பாக, ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இருநாட்டு அரசுகளின் ஆணையம் தரப்பில் உயா்நிலை பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. இந்தியா-ரஷியா அரசுத் தலைவா்கள் இடையே இதுவரை 22 பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு ஜூலையில் இப்பேச்சுவாா்த்தைக்காக பிரதமா் மோடி ரஷியா சென்றாா்.
அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி ரஷியாவில் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, இந்தியா மீது அதிபா் டிரம்ப் உச்சபட்சமாக 50 சதவீத இறக்குமதி வரியை விதித்தாா். இந்தியா-ரஷியா இடையிலான எரிசக்தி உறவுகள் குறித்து அமெரிக்கா தொடா்ந்து கவலை தெரிவித்து வரும் சூழலில், மோடி-புதின் சந்திக்கவிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவின் நீண்ட கால கூட்டாளியாக உள்ள ரஷியா, இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கியத் தூணாக தொடா்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.