
பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல புதிதாக சேர்க்கப்பட்ட 21 லட்சம் வாக்காளர்களின் விவரங்களையும் வருகிற அக். 9 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது.
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, "பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் முழுமையாக இல்லை, மேலும் அவர்கள் நீக்கப்பட்டதற்கான காரணமும் அவர்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை, காரணம் தெரிந்தால் மட்டுமே அவர்களால் மேல்முறையீடு செய்ய முடியும்" என்று மூத்த வழக்கறிஞர் சிங்வி வாதிட்டார்.
மேலும், '65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் இறுதி பட்டியலில் 21 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே நீக்கப்பட்டவர்களா? அல்லது புதிதாக சேர்க்கப்பட்டவர்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இறுதி பட்டியல் வெளியிடும்போது மேலும் 3.66 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டுள்ளனர்' சிங்வி தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி சூர்யகாந்த், ' பிகார் இறுதி வாக்காளர் பட்டியலில் 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் அதற்கான காரணத்தை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. முதலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் எத்தனை பேர் மீண்டும் சேர்க்கப்பட்டனர் என்பதையும் தெரிவிக்கவில்லை" என்று கூறினார்.
"இறுதி பட்டியலில் பழைய வாக்காளர்களும் இருக்கிறார்கள், சில புதிய வாக்காளர்களும் இருக்கின்றனர். நீக்கப்பட்டவர்களின் தரப்பில் இருந்து எந்த புகாரும் இல்லை.
பிகாரில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதால் மீண்டும் வாக்காளர் பட்டியல் விவகாரங்களை ஆராய நேரம் இல்லை. தற்போது புதிய உத்தரவுகள் பிறப்பித்தால் தேர்தலைப் பாதிக்கும்" என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து நீதிபதிகள், "தேர்தல் என்பது பொதுவான ஜனநாயக நடவடிக்கை. அதில் குழப்பம் எதுவும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் தேர்தல் நடவடிக்கை மீதான நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்து தெரிவிக்கப்பட்டதா? யாருக்கெல்லாம் தெரிவிக்கப்படவில்லையோ அவர்கள் மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு" என்று கூறினர்.
வழக்கு விசாரணையின் முடிவில் பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்களை அக். 9 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.