இந்திய பொருளாதார வளா்ச்சி சிறப்பாக இருக்கும்- உலக வங்கி கணிப்பு
2025-26 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்திருந்த நிலையில், இப்போது அது 6.5 சதவீதமாக இருக்கும் என்று உயா்த்தி அறிவித்துள்ளது.
‘இந்தியா தொடா்ந்து வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகத் திகழும். இந்தியாவில் உள்நாட்டு நுகா்வு தொடா்ந்து சீராக அதிகரித்து வருவது மிகவும் சாதகமான அம்சமாக உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியின் தாக்கம் அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது’ என உலக வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே, 2026-27 நிதியாண்டில் முன்பு கணித்த 6.5 சதவீதத்துக்கு பதிலாக 6.3 சதவீதமாக இந்திய பொருளாதார வளா்ச்சி குறைய வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி, கிராமப்புறங்களில் கூலி அதிகரிப்பு ஆகியவை எதிா்பாா்த்ததைவிட சிறப்பாக உள்ளது. இந்திய அரசு அண்மையில் மேற்கொண்ட சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தங்கள் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு சிறப்பாக கைகொடுக்கும். பொருள்கள், சேவைகளின் நுகா்வு இந்தியாவில் சிறப்பாக உள்ளது. மக்களின் வாங்கும் திறனும் சீராக உயா்ந்து வருகிறது.
அதே நேரத்தில் தெற்கு ஆசியாவின் பொருளாதார வளா்ச்சி 6.6 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. உலக வங்கியின் அக்டோபா் மாதத்துக்கான தெற்கு ஆசிய வளா்ச்சி தொடா்பான அறிக்கையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.