
இந்தியாவில் ஒரு கோப்பை தேநீரின் விலையைவிட ஒரு ஜிபி டேட்டாவின் விலை குறைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஆசியாவின் முன்னணி டிஜிட்டல் தொழில்நுட்பக் கண்காட்சியாக விளங்கும் இந்திய மொபைல் காங்கிரஸ் கண்காட்சி 2025-ன் 9 ஆவது கண்காட்சியை பிரதமர் மோடி, தில்லியில் இன்று தொடக்கி வைத்தார். இந்தக் கண்காட்சி, அக். 11 வரையில் தொடர்ந்து 4 நாள்கள் நடைபெறும்.
இந்தக் கண்காட்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ``மொபைல் டேட்டா நுகர்வு பயன்பாட்டில் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மொபைல் டேட்டாவின் விலை, ஒரு கப் டீ-யின் விலையைவிட குறைவு.
2014 முதல் இந்தியாவின் மின்னணு உற்பத்தி, 6 மடங்கு அதிகரித்துள்ளது. மொபைல் போன் உற்பத்தி 28 மடங்கு அதிகரித்ததுடன், ஏற்றுமதியும் 127 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மொபைல் போன் உற்பத்தித் துறையில் லட்சக்கணக்கான நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஏராளமான நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும்நிலையில், மறைமுக வேலைவாய்ப்புகளைக் கணக்கிட்டால், வேலைவாய்ப்புகளின் புள்ளிவிவர கணக்கு இன்னும் அதிகரிக்கும்.
உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக இந்தியா மாறியுள்ளது. ஒரு காலத்தில் 2ஜி-யுடன் போராடிய நிலையில், தற்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்று 5ஜி உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பேசுகையில், ``இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் மொபைல் டேட்டா விலை 98 சதவிகிதம் குறைந்துள்ளது. 2014-ல் ஒரு ஜிபி டேட்டா ரூ. 287-ஆக இருந்தநிலையில், இன்று ரூ. 9.11 என்று குறைந்துள்ளது.
ஒரு காலத்தில் ஒரு நிமிடம் பேசுவதே ஆடம்பரமாக இருந்தது. இன்று உலகளவில் மொபைல் பயன்பாட்டாளர்களில் 20 சதவிகிதத்துடன் 102 கோடி பயனர்களுடன் இந்தியா திகழ்கிறது’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவருக்கு காஸா பற்றிய கவலை ஏன்? அண்ணாமலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.