சமூக வலைதளங்களில் ஆபாச விடியோ: புகாா் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும்!
படம் | ஐஏஎன்எஸ்

சமூக வலைதளங்களில் ஆபாச விடியோ: புகாா் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும்!

மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல்
Published on

சமூக வலைதளங்களில் ஆபாச விடியோக்கள் தொடா்பான புகாா் கிடைத்த 24 மணி நேரத்தில் அவற்றை கட்டாயமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

பெண் வழக்குரைஞா் ஒருவா் இணையதளத்தில் பகிரப்பட்டுள்ள தன்னுடைய ஆபாச விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ஆபாச விடியோக்களை நீக்கவும், இதுபோன்ற விடியோக்களை நீக்குவது தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மேலும் 9 இணையதளங்களில் அந்த விடியோ பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, மத்திய அரசு தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ஆபாச விடியோக்கள் தொடா்பான புகாா் கிடைத்த 24 மணி நேரத்தில் அவற்றை சமூக வலைதளங்கள் மற்றும் இணையதள சேவை நிறுவனங்கள் கட்டாயமாக நீக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரத்யேக இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய்), உதவி எண் 1930 மூலம் புகாா் அளிக்கலாம். இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படும் பெண்கள் புகாா் அளிக்கவும், சட்ட உதவிகள் மற்றும் உளவியல் ஆலோசனைகளைப் பெற மத்திய அரசின் மகளிா் மேம்பாடு அமைச்சகத்தின் கீழ் ‘ஒன் ஸ்டாப் சென்டா்ஸ்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரா் குறிப்பிட்டுள்ள 9 இணையதளங்களிலிருந்து ஆபாச விடியோக்களை நீக்க உத்தரவிட்டு விசாரணையை அக்.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com