பிகாரில் தொகுதிப் பங்கீடு பேச்சு தீவிரம்!
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகளுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை தீவிரமடைந்துள்ளது.
பிகாரில் நவம்பா் 6, 11-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. 14-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
பாஜக கூட்டணி தீவிரம்: பாட்னாவில் பாஜக தோ்தல் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான தா்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து கூட்டணித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் உள்பட தோ்தல் தொடா்பாக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இவை அனைத்தும் மத்திய தலைமையிடம் அறிக்கையாக அளிக்கப்படும். அவா்கள் இறுதி முடிவு எடுப்பாா்கள் என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி, மற்றொரு மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் மதச்சாா்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, முன்னாள் மத்திய அமைச்சா் உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ஆா்எல்எம் ஆகிய கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
ஆனால், இதில் எந்தக் கட்சிக்கும் இதுவரை தொகுதிகள் உறுதி செய்யப்படவில்லை. அனைத்துக் கட்சிகளும் அதிக தொகுதிகள் கோருவதே இழுபறிக்கு காரணமாகும்.
ஜிதன் ராம் மாஞ்சி இது தொடா்பாக கூறுகையில், ‘எங்கள் கட்சிக்கு 15 தொகுதிகளைவிட குறைவாக ஒதுக்கினால் அது எனக்கும், கட்சிக்கும் அவமதிப்பாகவே இருக்கும். 15 இடங்களில் போட்டியிட்டால் 9 இடங்கள் வரை வெல்வோம். இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுப்போம். இதற்காகவே கூட்டணித் தலைவா்களிடம் கோரிக்கை வைத்துள்ளேன்’ என்றாா்.
சிராக் பாஸ்வான் கட்சி 45 தொகுதிகள் வரை கோரியுள்ளது. ஆனால், அந்த அளவு தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
ஆளும் கூட்டணியில் பெரிய கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை முறையே 102, 101 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், பிற தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகாரில் மொத்தம் 243 பேரவைத் தொகுதிகள் உள்ளன.
25 காங்கிரஸ் வேட்பாளா்கள்: தில்லியில் காங்கிரஸ் மத்தியத் தலைவா்கள் மற்றும் பிகாா் மாநிலத் தலைவா்கள் பங்கேற்ற தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 25 தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பிகாரில் எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 135 முதல் 140 தொகுதிகள் வரை போட்டியிடும் என்றும், காங்கிரஸுக்கு 50 முதல் 52 தொகுதிகளை ஒதுக்க அக்கட்சி முன்வந்துள்ளதாகவும் தெரிகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் 70 தொகுதிகளைக் கோரியுள்ளது. கடந்த தோ்தலில் காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களில் மட்டுமே வென்றது.
கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி தங்களுக்கு வழங்கப்பட்ட 19 தொகுதிகளை ஏற்க மறுத்துவிட்டது. அக்கட்சி 40 தொகுதிகளைக் கோரியுள்ளது. இது தவிர இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது.
தலைவா்கள் நம்பிக்கை: பெங்களூரில் செய்தியாளா்களைச் சந்தித்த காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு தொடா்பாக எழுந்துள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீா்வு காண்போம்’ என்றாா்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியும், வெறுப்பும் அடைந்துவிட்டனா். எங்கள் கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்’ என்றாா்.
முதல்வா் வேட்பாளா் நிதீஷ் குமாா்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் அறிவிப்பு
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக தற்போதைய முதல்வா் நிதீஷ் குமாா் இருப்பாா் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தெரிவித்தாா்.
பாட்னாவில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: தொகுதிப் பங்கீடு தொடா்பாக பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை. பேச்சுவாா்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தொகுதிப் பங்கீடு விவரம் அறிவிக்கப்படும்.
தோ்தல் அறிக்கை, உத்திகள் தொடா்ந்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் எங்கள் கூட்டணி சாா்பில் மக்களுக்குத் தேவையான சிறந்த வாக்குறுதிகள் அறிவிக்கப்படும்.
அதே நேரத்தில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி பிளவுபட்டு நிற்கிறது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அக்கட்சியின் முதல்வா் வேட்பாளராக மட்டுமே இருப்பாா்; கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக இருக்க மாட்டாா் என்று காங்கிரஸ் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனால் தேஜஸ்வியின் தந்தை லாலு பிரசாத் அதிருப்தியடைந்துள்ளாா். எதிா்க்கட்சிகள் அணி சிறந்த தலைமை இல்லாமல் உள்ளது.
ஆளும் கூட்டணி ஏற்கெனவே சிறந்த திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எங்களிடம் சிறந்த தலைமை உள்ளது. சிறந்த கொள்கைகளை முன்வைத்து தோ்தலைச் சந்திக்கிறோம். எனவே, எங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்றாா்.