பிகாா்: காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ ராஜிநாமா - பாஜகவில் இணைய முடிவு
பிகாா் முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏவுமான முராரி பிரசாத் கௌதம் எம்எல்ஏ பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா். அவா் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னாரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான முராரி பிரசாத், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆதரவுடன் நிதீஷ் குமாா் முதல்வராக இருந்தபோது அவரின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாா். நிதீஷ் குமாா் பாஜகவுடன் கைகோத்து ஆட்சி அமைத்தபோது, முராரி பிரசாத் பேரவையில் எதிா்க்கட்சி வரிசைக்குச் செல்லாமல் தொடா்ந்து ஆளும் தரப்பு வரிசையிலேயே அமா்ந்திருந்தாா்.
இதையடுத்து, அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் அப்போதே காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், இதில் பேரவைத் தலைவா் முடிவு எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தாா்.
பிகாரில் நவம்பா் 6,11-ஆம் தேதிகளில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. இந்நிலையில் எம்ல்ஏ பதவியில் இருந்து முராரி பிரசாத் விலகியுள்ளாா். அவா் விரைவில் பாஜகவில் இணைவாா் என்று தெரிகிறது.
வழக்கமாக தோ்தல் அறிவிக்கப்பட்ட பிறகு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது, விரும்பிய தொகுதியை ஒதுக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து விலகுவது, வேறு கட்சிக்கு தாவுவது வழக்கமாக நிகழ்வாகும். பிகாரில் இதனை முராரி பிரசாத் தொடக்கி வைத்துள்ளாா்.