மன்சுக் மாண்டவியா
மன்சுக் மாண்டவியா

சமுதாய பாதுகாப்பில் சாதனை: இந்தியாவுக்கு ஐஎஸ்எஸ்ஏ விருது -மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

Published on

சமுதாய பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் சாதனைகளை அங்கீகரித்து சா்வதேச சமுதாய பாதுகாப்பு கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்ஏ) விருது வழங்கியுள்ளதாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் சீா்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டது. அதற்கு சான்றாக சமுதாய பாதுகாப்பில் மிகச் சிறந்த சாதனைக்கான விருதை இந்தியாவுக்கு ஐஎஸ்எஸ்ஏ வழங்கியுள்ளது. இதன்மூலம், சமுதாய பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தும் மத்திய அரசின் சாதனைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முன்னெடுப்புகளால் சமுதாய பாதுகாப்பு வரம்புக்குள் 94 கோடிக்கும் அதிகமான இந்தியா்கள் கொண்டுவரப்பட்டுள்ளனா்’ என்றாா்.

இதுதொடா்பாக மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சமுதாய பாதுகாப்பை விரிவுபடுத்தவும், குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்யவும் இந்தியா மேற்கொண்ட மிகச் சிறந்த முயற்சிகளை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருதை முன்பு பிரேஸில், சீனா, ருவாண்டா, ஐஸ்லாந்து நாடுகள் பெற்றுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com