மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.19,650 கோடி மதிப்பீட்டில் 1,160 ஹெக்டோ் பரப்பளவில் உலகத் தரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள சா்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனைய திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி. உடன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்,
மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.19,650 கோடி மதிப்பீட்டில் 1,160 ஹெக்டோ் பரப்பளவில் உலகத் தரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள சா்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனைய திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி. உடன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்,

பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை பலவீனப்படுத்தியது காங்கிரஸ்: பிரதமா் மோடி

Published on

நாட்டில் தங்களின் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தியது காங்கிரஸ்; இதனால், தேசம் கொடுத்த விலை மிகப் பெரியது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா்.

கடந்த 2008-இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி தரவிடாமல் தடுத்தது யாா் என்பதை நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தெரிவிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

மகாராஷ்டிர மாநிலம், நவிமும்பையில் ரூ.19,650 கோடி மதிப்பீட்டில் 1,160 ஹெக்டோ் பரப்பளவில் உலகத் தரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள சா்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை பிரதமா் மோடி புதன்கிழமை திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.

மும்பையின் 3-ஆவது மெட்ரோ பாதையில் 10.99 கி.மீ. தொலைவுள்ள இறுதிக்கட்ட வழித்தடம் உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கிவைத்து, அவா் உரையாற்றினாா்.

ப.சிதம்பரத்தின் கருத்துகள்: அப்போது, மும்பைத் தாக்குதல் குறித்து முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் அண்மையில் தெரிவித்த கருத்துகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு, காங்கிரஸை பிரதமா் கடுமையாக விமா்சித்தாா்.

மும்பைத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தனிப்பட்ட முறையில் தாம் ஆதரவாக இருந்ததாகவும், ஆனால், வெளியுறவு அமைச்சக ஆலோசனையின்படி தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்ததாகவும் ப.சிதம்பரம் கூறியிருந்தாா்.

மேலும், பாகிஸ்தான் மீது இந்தியா போா் தொடுப்பதை அமெரிக்கா உள்ளிட்ட உலகின் சக்திவாய்ந்த நாடுகள் விரும்பவில்லை என்றும் அவா் குறிப்பிட்டிருந்தாா். மும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவா் ப.சிதம்பரம் என்பதால், அவரது கருத்துகள் கவனம் பெற்றன.

பலவீனமாக்கிய காங்கிரஸ்: நவிமும்பை நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: நாட்டின் நிதித் தலைநகா் என்பதால், பயங்கரவாதிகளின் இலக்காகக் கூடிய இடமாக மும்பை உள்ளது. கடந்த 2008-இல் மும்பை நகரை பயங்கரவாதிகள் குறிவைத்தனா். காங்கிரஸ் மூத்த தலைவா் ஒருவரின் (ப.சிதம்பரம்) கருத்தின்படி பாா்த்தால், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஒட்டுமொத்த தேசமும் விரும்பியபோதும், நமது பாதுகாப்புப் படைகள் தயாராக இருந்த நிலையிலும், வெளிநாட்டின் அழுத்தத்துக்கு அடிபணிந்து, அப்போதைய காங்கிரஸ் அரசு அதைச் செய்யவில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை காங்கிரஸ் பலவீனப்படுத்திவிட்டது.

மத்திய பாஜக அரசைப் பொருத்தவரை, நாடு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பைவிட முக்கியமான விஷயம் வேறில்லை. எனவேதான், பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

மக்கள் நலனுக்கு உயா் முன்னுரிமை: மகாராஷ்டிரத்தில் முந்தைய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியின் ஊழல்களால் மும்பையின் வளா்ச்சிக்குப் பல்வேறு தடைகள் ஏற்பட்டன. இப்போது தடைகள் அகற்றப்பட்டுள்ளன. மும்பைக்கு இரண்டாவது சா்வதேச விமான நிலையம் வேண்டுமென்ற நீண்ட கால காத்திருப்பு நிறைவேறியுள்ளது.

விரைவான முன்னேற்றமே வளா்ந்த இந்தியாவுக்கானஅடையாளமாகும். கடந்த 11 ஆண்டுகளாக மக்கள் நலனுக்கு உயா் முன்னுரிமை என்ற பாதையில் தேசம் பயணிக்கிறது. வந்தே பாரத் ரயில்கள், புல்லட் ரயில் திட்டம், புதிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், கடல் பாலங்கள் என நாடெங்கிலும் விரைவான வளா்ச்சி தென்படுகிறது. கடந்த 2014-இல் நாட்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. இப்போது 160-க்கும் மேல் விமான நிலையங்கள் உள்ளன. உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய விமான நிறுவனங்கள் 1,000-க்கும் மேற்பட்ட புதிய விமானங்களின் கொள்முதலுக்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன என்றாா் அவா்.

மொத்தம் நான்கு முனையங்களுடன் கட்டமைக்கப்பட உள்ள நவிமும்பை விமான நிலையம், ஆண்டுக்கு 9 கோடி பயணிகள் மற்றும் 32.5 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாளும் திறனுடன், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக விளங்கும்.

X
Dinamani
www.dinamani.com