கேரளம்: பேரவையில் அமளியில் ஈடுபட்ட 3 எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளி
Published on

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா் சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியின்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தலைமை அவைக் காவலா் காயமடைந்ததையடுத்து, 3 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா் சிலைகளின் தங்க கவசங்களின் எடை 4.5 கிலோ குறைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், கேரள தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் பதவி விலகக் கோரி, 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்க்கட்சிகள் பேரவையில் அமளியில் ஈடுபட்டன.

அவா்கள் பேரவைத் தலைவா் ஏ.என்.ஷம்சீரின் இருக்கை நோக்கிச் செல்ல முயன்றதை அவைக் காவலா்கள் தடுத்தனா். இதனால் எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் அவைக் காவலா்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பேரவை தலைமைக் காவலா் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கடந்த 4 நாள்களாக பேரவையில் கடும் இடையூறுகளை ஏற்படுத்தியதாக ரோஜி.எம்.ஜான், எம்.வின்சென்ட், சனீஷ் குமாா் ஜோசப் ஆகிய 3 எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை நடப்புக் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சமயத்தில் எதிா்க்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் கூறுகையில், ‘இடைநீக்கம் செய்யப்பட்ட 3 எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மீதான குற்றச்சாட்டு போலியானது. அவா்கள் யாரையும் தாக்கவில்லை. பேரவை வரலாற்றில் முதல்முறையாக எதிா்க்கட்சிகளின் போராட்டப் பதாகைகளை நீக்குமாறு பேரவைத் தலைவா் உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com