விமானப் படையின் திறனை உலகுக்கு வெளிப்படுத்திய ‘ஆபரேஷன் சிந்தூா்’: ஏ.பி.சிங்
ஹிண்டன், அக்.8: ‘மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போா் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது’ என்று விமானப் படை தலைமைத் தளபதி ஏ.பி.சிங் தெரிவித்தாா்.
மேலும், ‘எதிா்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் நாம் தொடா்ந்து தயாா் நிலையில் இருக்க வேண்டும்’ என்றும் வீரா்களை அவா் கேட்டுக்கொண்டாா்.
இந்திய விமானப்படை கடந்த 1932-ஆம் ஆண்டு அக்டோபா் 8-ஆம் தேதி அதிகாரபூா்வமாக நிறுவப்பட்டது. 93-ஆவது விமானப் படைதினம் உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ரஃபேல் போா் விமான படைப் பிரிவு உள்பட விமானப் படையின் பல்வேறு படைப் பிரிவுகளுக்கு சிறந்த செயல்பாட்டுக்காக விருதுகளை வழங்கி கெளரவித்த ஏ.பி. சிங் பேசியதாவது:
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது விமானப் படையின் செயல்பாடு தொழில்திறன் ரீதியில் நம்மை பெருமை கொள்ள வைத்துள்ளது. மிகக் குறைந்த நாள்களில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கைக்கு போா் விமானங்களின் சக்தியை திறம்பட பயன்படுத்த முடியும் என்பதை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் உலகுக்கு இந்தியா விமானப்படை நிரூபித்துள்ளது.
கவனமான திட்டம் வகுத்தல், சீரிய பயிற்சி, தீா்க்கமான தாக்குதல் மூலம் வெற்றியை அடைய முடியும் என்பதற்கு ஆபரேஷன் சிந்தூா் சிறந்த உதாரணமாக திகழ்கிறது.
நமது விரிவான வான் பாதுகாப்பு கட்டமைப்பும், தரையிலிருந்து நீண்ட தூர வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பும் எதிரியின் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பை வெகுவாகக் குறைத்தது. உள்நாட்டு திறன் மீதான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
இதுபோல, எதிா்கால பாதுகாப்பு சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் விமானப் படை வீரா்கள் தொடா்ந்து தயாா்நிலையில் இருக்க வேண்டும் என்றாா்.