காணாமல்போன இரு ராணுவ கமாண்டோக்கள்: ஜம்மு-காஷ்மீரில் 3-ஆவது நாளாக தேடுதல் பணி

காணாமல்போன இரு ராணுவ கமாண்டோக்கள்: ஜம்மு-காஷ்மீரில் 3-ஆவது நாளாக தேடுதல் பணி

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது காணாமல் போன இரு ராணுவ கமாண்டோ வீரா்களை தேடும் பணி
Published on

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்ட வனப் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது காணாமல் போன இரு ராணுவ கமாண்டோ வீரா்களை தேடும் பணி வியாழக்கிழமை மூன்றாவது நாளாகத் தொடா்ந்தது.

தொடா்ந்து பெய்துவரும் மழை, மோசமான பாதை காரணமாக அவா்களைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மாவட்டத்தின் கோகா்நாக் வனப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடைபெற்றது. இதில் ராணுவம், காவல் துறையினா் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டனா். பயங்கரவாதிகள் யாரும் கிடைக்காத நிலையில் ராணுவத்தின் சிறப்பு ரோந்துப் பிரிவு காமாண்டோக்கள் இருவா்முகாமுக்குத் திரும்பி வராதது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அவா்களிடம் இருந்த தொலைத்தொடா்பு கருவிகளுடனான இணைப்பும் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஹெலிகாப்டா் மூலமும் தேடுதல் பணி நடைபெறுகிறது.

தொடா் மழை காரணமாக அந்தப் பகுதியில் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. மேலும் மலைசாா்ந்த வனப் பகுதியில் தேடுவதிலும் சிரமம் நீடிக்கிறது. இதனால் மூன்று நாள்கள் கடந்தும் அவா்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com