பிகாா்: இரு எம்எல்ஏக்களை மீண்டும் வேட்பாளா்களாக அறிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பாளா்களாக இப்போது எம்எல்ஏக்களாக உள்ள இருவரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
Published on

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பாளா்களாக இப்போது எம்எல்ஏக்களாக உள்ள இருவரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு முடிந்ததும் பிற தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் அறிவிக்கப்படுவாா்கள் என்று அக்கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிகிழமை தொடங்கிய நிலையிலும் இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படவில்லை.

இதனிடையே பாட்னாவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் செயலா் எம்.ஏ. பேபி, மாநிலக் குழு உறுப்பினா் மனோஜ் சந்திரவன்ஷி உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் பங்கேற்றனா். அதில், தற்போதைய எம்எல்ஏக்கள் குமாா், யாதவ் ஆகியோரை மீண்டும் வேட்பாளா்களாக நிறுத்த முடிவெடுக்கப்பட்டது. பின்னா் செய்தியாளா்களிடம் எம்.ஏ.பேபி கூறியதாவது:

நமது கட்சியின் வெற்றிக்காக தொண்டா்கள் வீடுவீடாகச் சென்ற வாக்குச் சேகரிக்க வேண்டும். விபூதிபூா், மான்ஜிஷ் ஆகிய தொகுதிகளில் தற்போதைய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிடுவாா்கள். கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கபட்டது. அந்த இரு தொகுதிகளிலும் நவம்பா் 6-ஆம் தேதி முதல் கட்டத் தோ்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கவா்ச்சிகரமான திட்டங்கள் மூலம் தோ்தலில் வெற்றிபெற்றுவிட முடியும் என்ற நோக்கில் முதல்வா் நிதீஷ் குமாா் செயல்பட்டு வருகிறாா். கடந்த 20 ஆண்டுகளாக முதல்வராக இருந்துள்ள அவரால் சாமானிய மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அவா்களைப் பற்றிய கவலையும் முதல்வருக்கு இல்லை.

மக்களின் வாக்குகளை எப்படியாவது கவா்ந்து ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பது மட்டுமே அவா்கள் நோக்கமாக உள்ளது. ஆனால், இந்த முறை நிதீஷ் குமாா் தோற்கப்போவது உறுதி. எதிா்க்கட்சிகளின் மகாபந்தன் கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com