
போபாலில் போலீஸார் தாக்கியதில் பி.டெக் மாணவர் பலியான சம்பவத்தில் 2 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலத் தலைநகரான போபாலில், பி.டெக் மாணவர் உடித் காய்கே நேற்று இரவு விருந்து ஒன்றில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். இரவு சுமார் 1:30 மணியளவில் நண்பர்களில் ஒருவர் காய்கேவை வீட்டில் இறக்கிவிட அழைத்துச் சென்றிருகிறார். அப்போது போலீஸாரைக் கண்டதும் காய்கே ஓடியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் காய்கேவை துரத்திப் பிடித்து தாக்கினர். இதில் காய்கேவின் சட்டை கிழிந்ததோடு, உடலில் காயங்களும் ஏற்பட்டன. தாக்குதலை நிறுத்துமாறு கூறியதற்கு, போலீஸார் ரூ.10,000 கேட்டதாக நண்பர்கள் குற்றஞ்சாட்டினர். பின்னர் காய்கேயை அவரது நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்படும் 2 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உடற்கூற்று அறிக்கை வந்த பிறகு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என போபால் மண்டலம் போலீஸ் அதிகாரி விவேக் சிங் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.