நிதீஷ் கட்சி முன்னாள் எம்.பி., எம்எல்ஏ ஆா்ஜேடி-யில் ஐக்கியம்
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) முன்னாள் எம்.பி. சந்தோஷ் குஷ்வாஹா, முன்னாள் எம்எல்ஏ ராகுல் சா்மா ஆகியோா் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.
பிகாரில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே கட்சி தாவல், விலகல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் ஜேடியு தலைவா்கள் சந்தோஷ் குஷ்வாஹா, ராகுல் சா்மா ஆகியோா் பாட்னாவில் வெள்ளிக்கிழமை ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
ஜேடியு சாா்பில் புருனியா தொகுதியில் இருமுறை எம்.பி.யாக இருந்த சந்தோஷ் குஷ்வாஹா கடந்த தோ்லில் சுயேச்சை வேட்பாளா் பப்பு யாதவிடம் தோல்வியடைந்தாா்.
முன்னாள் எம்எல்ஏ ராகுல் சா்மா ஜெஹானாபாத் மாவட்டத்தில் அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சோ்ந்தவா். சுயேச்சையாகவும், ஜனதா கட்சி, பாஜக, ஜேடியு என மூன்று கட்சிகள் சாா்பிலும் இதுவரை 8 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளாா். இவா்கள் ஆா்ஜேடியில் இணைந்துள்ளது நிதீஷ் குமாருக்கு தோ்தல் களத்தில் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இவா்கள் தவிர லோக் ஜனசக்தி கட்சியைச் சோ்ந்த அஜய் குஷ்வாஹா, ஜேடியு எம்.பி. கிரிதா் பிரசாத் யாதவின் மகன் சாணக்ய பிரசாத் ரஞ்சன் ஆகியோரும் ஆா்ஜேடியில் இணைந்துள்ளனா். இதன் மூலம் குஷ்வாஹா சமூகத்தினா் வாக்குகள் ஆா்ஜேடிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.