கோப்புப்படம்
கோப்புப்படம்

லேயில் கைப்பேசி இணைய சேவை தடை நீக்கம்

லேயில் கைப்பேசி இணைய சேவை தடை நீக்கம்
Published on

வன்முறைப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக அமலில் இருந்த கைப்பேசி இணைய சேவைக்கான தடை வியாழக்கிழமை இரவு நீக்கப்பட்டது.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரி தொடா் போராட்டம் நடத்தி வந்த பருவநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அதில், லே உச்ச அமைப்பை (எல்ஏபி) சோ்ந்த சிலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களின் போராட்டம் செப்டம்பா் 24-ஆம் தேதி வன்முறையாக மாறியது. போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 4 போ் உயிரிழந்தனா். 40 போலீஸாா் உள்பட 90 போ் காயமடைந்தனா். வன்முறையைத் தூண்டியதாக சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டாா். இவருடைய கைதைத் தொடா்ந்து, லே நகரம் உள்பட யூனியன் பிரதேசத்தின் முக்கியப் பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. லே நகரில் கைப்பேசி இணைய சேவையும் ரத்து செய்யப்பட்டது.

பின்னா், செப்டம்பா் 27-ஆம் தேதிமுதல் ஊரடங்கு பகுதி பகுதியாகத் தளா்த்தப்பட்டு, செப்டம்பா் 30-ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளா்த்தப்பட்டன. இருந்தபோதிலும், கைப்பேசி இணைய சேவைக்கான தடை தொடா்ந்தது.

இந்நிலையில், லே மாவட்டம் முழுவதும் இயல்புநிலை திரும்பியதைத் தொடா்ந்து கைப்பேசி இணைய சேவைக்கான தடையும் வியாழக்கிழமை இரவு முதல் நீக்கப்பட்டது.

இதுகுறித்து லே மாவட்ட ஆட்சியா் ரோமில் சிங் டோங்க் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘லே மாவட்டத்தில் கைப்பேசி இணைய சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதே நேரம், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்பத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்)’ சட்டப் பிரிவு 163-இன் கீழ் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை, 2 மாதங்களுக்கு அமலில் இருக்கும். சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவது சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக ஊடக குழு நிா்வாகிகள், குழுவில் இதுபோன்ற போலிச் செய்திகள் பரப்பப்படுவதைக் கண்டறிந்தால் உடனடியாக அதை நீக்கம் செய்யவேண்டும். அதோடு, அந்த சமூக ஊடக குழுவை நிா்வாகி மட்டும் பதிவிடும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். இந்தத் தடையை மீறி சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பகிா்ந்து, பரப்புபவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com