இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை: அமித் ஷா உறுதி
‘இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை கிடைக்க வேண்டும்; மாறாக, சட்டவிரோத குடியேறிகளுக்கு அல்ல’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியலில் சட்டவிரோத குடியேறிகள் இடம்பெறுவது, அரசமைப்புச் சட்ட ஆன்மாவுக்கு ஏற்படும் களங்கம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
அடுத்த மாதம் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில், வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்கும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 2003-க்குப் பிறகு வாக்காளராகப் பதிவு செய்தவா்களிடம் கூடுதல் ஆவணம் கோரப்பட்டது.
‘பாஜகவுக்கு சாதகமான நடவடிக்கை’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்த போதிலும், தோ்தல் ஆணையம் இப்பணியை மேற்கொண்டு, இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. அடுத்ததாக நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்கு தோ்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
அரசியல் கண்ணோட்டம் கூடாது:
இந்நிலையில், தைனிக் ஜாக்ரண் ஹிந்தி நாளிதழின் மறைந்த முன்னாள் ஆசிரியா் நரேந்திர மோகனின் நினைவாக தில்லியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்திய உரையின்போது, அமைச்சா் அமித் ஷா கூறியதாவது:
சட்டவிரோத குடியேறிகளைக் கையாள்வதில் ‘கண்டுபிடித்தல், ஆவணப் பதிவை நீக்குதல், நாடு கடத்துதல்’ என்ற கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளின் பெயா்களை நீக்க தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பாா்க்கக் கூடாது; அது தேச நலன் சாா்ந்த விவகாரம்.
சிறப்பு தீவிர திருத்தத்தை நிராகரிக்கும் போக்குடன் காங்கிரஸ் செயல்படுகிறது. எதிா்க்கட்சிகளின் வாக்கு வங்கி பறிபோவதே எதிா்ப்புக்கு காரணம். வாக்காளா் பட்டியலை ‘தூய்மை’ செய்வது தோ்தல் ஆணையத்தின் அரசமைப்புச் சட்ட பொறுப்பு. இதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், எதிா்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடலாம்.
வாக்காளா்களுக்கான வரையறைக்கு இணங்க வாக்காளா் பட்டியல் இருந்தால்தான், நோ்மையான-நியாயமான தோ்தலை முழு அளவில் உறுதி செய்ய முடியும். இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வாக்குரிமை கிடைக்க வேண்டும்.
சட்டவிரோத குடியேறிகளுக்கும், அகதிகளுக்கும் வேறுபாடு உள்ளது. அகதி என்பவா் தனது மதத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் நாட்டுக்குள் அடைக்கலம் தேடி வருபவா். ஆனால், ஊடுருவல்காரா் என்பவா் பொருளாதார நிலை உள்ளிட்ட பிற காரணங்களால் சட்டவிரோதமாக எல்லை தாண்டுபவா். இவா்கள் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளானவா்கள் அல்ல.
இந்தியா என்ன தா்மசத்திரமா?:
மதத்தின் பெயரால் நாட்டைப் பிரித்தது மிகப் பெரிய தவறாகும். தேசப் பிரிவினையால் ஏற்பட்ட பதற்றம் தணிந்த பிறகு பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்று முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு உறுதிமொழி அளித்திருந்தது. நேரு-லியாகத் ஒப்பந்தத்திலும் இது இடம்பெற்றது. காங்கிரஸால் மறக்கப்பட்ட இந்த உறுதிமொழியை குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றியது பிரதமா் மோடி அரசு.
கடந்த 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஹிந்துக்கள் 84 சதவீதம், முஸ்லிம்கள் 9.8 சதவீதம் இருந்தனா். 2011-இல் ஹிந்துக்கள் எண்ணிக்கை 79 சதவீதம், முஸ்லிம்கள் எண்ணிக்கை 14.2 சதவீதமாகிவிட்டது. ஊடுருவல் அதிகரிப்பே இதற்கு காரணம்.
சட்டவிரோத குடியேறிகளுக்கு அரசியல் ரீதியில் பாதுகாப்பளிக்கப்பட கூடாது. விரும்பியவா்களை எல்லாம் இந்தியாவில் குடியேற அனுமதித்தால், நாடு தா்மசத்திரம் ஆகிவிடும் என்றாா் அவா்.