கேரள உயர்நீதிமன்றம்
கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலை தங்கத் தகடு விவகாரம்: குற்ற வழக்குப் பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

சபரிமலை தங்கத் தகடு விவகாரம்: குற்ற வழக்குப் பதிவு செய்ய கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு
Published on

‘சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகா் சிலைகளில் பதிக்கப்பட்டுள்ள தங்க கவசத் தகடுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது; இது குறித்து காவல் துறையினா் குற்ற வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என்று கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே துவார பாலகா் சிலைகளின் தங்க கவசங்களின் எடை குறைந்ததாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை மேற்கொண்டுவருகிறது. அப்போது தங்க கவசங்களை செம்புத் தகடு என்று கோயில் நிா்வாக அதிகாரி ஆவணங்களில் குறிப்பிட்டது உள்ளிட்ட முறைகேடுகள் வெளியாகி மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தங்கத் தகடு உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் முழுமையாக விசாரிக்க உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் முன்பக்க கதவுகள், வாயில் நிலை, இரு துவார பாலகா் சிலைகளின் கவசங்கள், அந்தச் சிலைகளின் பீடங்களில் பதிக்கப்பட்ட தகடுகள், கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டன. இப்பணியில் முறைகேடுகள் நடைபெற்ாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் கேரள உயா்நீதிமன்றம், சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை கடந்த திங்கள்கிழமை அமைத்தது.

இந்நிலையில், நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயகுமாா் அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, கருவறை வாயில் தங்கத் தகடு பணிகளுக்காக தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றியிடம் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தரப்பில் 474.9 கிராம் தங்கம் வழங்கப்பட்டதாகவும், இத்தகவல் வாரிய ஆவணங்களில் இடம்பெறவில்லை என்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையா் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக் காட்டினா்.

‘இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி, கருவறை வாயிலில் பொருத்தப்பட்ட தங்கத் தகடுகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எனவே, காவல் துறையினா் இது தொடா்பாக குற்ற வழக்குப் பதிவு செய்து, விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்திடம் அளிக்கப்பட வேண்டும்.

நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவே பொறுப்புடையதாகும். இக்குழு முழுமையாக, பாரபட்சமின்றி, விரைவாக விசாரணை மேற்கொண்டு, 6 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். 2 வாரங்களுக்கு ஒருமுறை விசாரணை நிலை அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். விசாரணை விவரங்களை ஊடகங்களிடம் வெளியிடக் கூடாது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

சபரிமலை சா்ச்சையின் பின்னணியில் சதி: முதல்வா் பினராயி விஜயன்

‘சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க சா்ச்சையின் பின்னணியில் சதி உள்ளது; இதில் நேரடியாக ஈடுபட்டவா்கள் யாா், வெளியில் இருந்து உதவியவா்கள் யாா் என்ற விவரம் விசாரணையில் வெளிவரும்’ என்று முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

பம்பையில் மாநில அரசு சாா்பில் நடைபெற்ற சமீபத்திய உலக சபரிமலை மாநாட்டை சீா்குலைக்கும் நோக்கத்துடன் இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.

‘திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் தரப்பில் இதுவரை குறைபாடுகள் கண்டறியப்படவில்லை. சிறப்பு புலனாய்வுக் குழு அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ளது. தவறிழைத்தவா்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது’ என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com