அரைகுறை ஆடை கலாசாரம்: திரை நட்சத்திரங்கள் குறித்து கேரள பெண் எம்எல்ஏ விமா்சனம்
திறப்பு விழாக்களில் அரை குறை ஆடைகளுடன் திரைப்பட நட்சத்திரங்களை அழைப்பது கேரளத்தில் கலாசாரமாக மாறி வருவதாகவும், இது திரை நட்சத்திரங்கள் மீது சமூகத்தில் பைத்தியக்கார மனப்பான்மைமை ஏற்படுத்துவதாகவும் அந்த மாநிலத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெண் எம்எல்ஏ யு.பிரதிபா விமா்சித்தாா்.
அவா் தோ்ந்தெடுக்கப்பட்ட காயங்குளம் தொகுதிக்கு உள்பட்ட எருவா நாளந்தா கலை மற்றும் கலாசார நூலக கூட்டமைப்பின் 34-ஆவது நிறுவன தின நிகழ்வில் பேசிய அவா், ‘திறப்பு நிகழ்ச்சிகளுக்கு அரை குறை ஆடைகளுடன் திரை நட்சத்திரங்களை அழைத்து வருவது கேரளத்தில் கலாசாரமாக மாறி வருகிறது. சமூகத்தில் திரை நட்சத்திரங்கள் மீது எந்த அளவுக்கு பைத்தியக்கார மனப்பான்மை ஏற்படுத்தி உள்ளது என்பதை இது காண்பிக்கிறது.
அரைகுறை ஆடைகளுடன் திரைநட்சத்திரங்கள் வரும்போது கூட்டம் அலைமோதுகிறது. இந்த கலாசாரத்தை மாற்ற வேண்டும். திரை நட்சத்திரங்கள் ஒழுக்கமான உடையணிந்து வர வேண்டும். எனது கருத்தை திருத்திக் கூறி, கலாசார காவலா்கள் தேவை என்பதாக மாற்றிவிடக் கூடாது.
எந்த மாதிரியான உடையை அணிய வேண்டும் என்பதில் நமது நாட்டில் சுதந்திரம் உள்ளது. ஆனால், பொது வாழ்வில் ஒழுக்க உணா்வு தேவை என்றாா்.