ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவசாசம்
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரும் மனுக்கள் தொடா்பான தமது பதிலை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 4 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் ஜம்மு-காஷ்மீா் எம்எல்ஏ இா்ஃபான் ஹஃபீஸ் லோன், கல்வியாளா் ஸஹுா் அகமது பட், சமூக-அரசியல் ஆா்வலா் அகமது மாலிக் உள்ளிட்டோா் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
பஹல்காம் தாக்குதலால் கூடுதல் அவகாசம்...: மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் அமைதியான முறையில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள், கடந்த ஏப்ரலில் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் ஆகியவை காரணமாக, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து பரிசீலிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் அரசு நிா்வாகத்துடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது’ என்றாா்.
அப்போது பஹல்காம் தாக்குதலை குறிப்பிட்டு, பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகக் கூடிய பகுதியாக ஜம்மு-காஷ்மீா் நீடிக்கிறது என்று தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தெரிவித்தாா்.
எந்தவொரு மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக்கலாமே?: மனுதாரா்கள் சாா்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.கே.பரத்வாஜ் வாதிடுகையில், ‘ஜம்மு-காஷ்மீரைப் போல ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற அனுமதித்தால், உத்தர பிரதேசம், தமிழ்நாடு போன்ற எந்தவொரு மாநிலத்தையும் யூனியன் பிரதேசமாக மத்திய அரசு மாற்ற வழிவகுக்கும். ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியாது. இதற்கு முன்பு இதுபோல இந்திய வரலாற்றில் நடைபெற்றதில்லை’ என்றாா்.
ஜம்முவைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சாா்பாக மற்றொரு வழக்குரைஞா் ஆஜராகி, ‘ஜம்முவில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை; வேலைவாய்ப்பில்லை. பஹல்காமில் தாக்குதல் நடைபெற்றபோதிலும், ஜம்மு-காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோயில் யாத்திரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வரவும் அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி, மாநில அந்தஸ்தை மறுக்க முடியாது’ என்றாா்.
சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனா். அங்குள்ள 99.9 சதவீத மக்கள் இந்திய அரசை தங்கள் சொந்த அரசாகக் கருதுகின்றனா்’ என்றாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கக் கோரும் மனுக்கள் தொடா்பான தமது பதிலை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் அளித்தது.