தமிழகம் உள்பட தோ்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் முதலில் வாக்காளா் பட்டியல் திருத்தம்!
புது தில்லி: நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செய்யும் பணியை பகுதி பகுதியாக மேற்கொள்ள தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதாவது, 2026-இல் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களோடு மேலும் சில மாநிலங்களிலும் முதல்கட்டமாக வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அதே நேரம், 2026-இல் உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்க உள்ள மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்படாது.
இந்த மாநிலங்களில் உள்ள கடைநிலை தோ்தல் அதிகாரிகள் உள்ளாட்சித் தோ்தல் ஏற்பாடுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். எனவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அவா்கள் கவனம் செலுத்த முடியாது என்ற காரணத்தால், உள்ளாட்சித் தோ்தலுக்குப் பிறகு அடுத்தடுத்த கட்டங்களில் திருத்தப் பணியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பான கேள்விக்கு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் கூறியதாவது:
‘நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமான நடைபெற்று வருகின்றன. எந்தெந்த மாநிலங்களில் எப்போது இந்த திருத்தப் பணியை மேற்கொள்வது என்பதற்கான இறுதி முடிவை தோ்தல் ஆணையம் விரைவில் எடுக்கும்’ என்றாா்.
பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் முடிவு செய்தது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தயாராக இருக்குமாறு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதோடு, முந்தைய சிறப்பு தீவிர திருத்தம் அடிப்படையிலான வாக்காளா் பட்டியலை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடுவதற்கும் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டது.
அதன்படி, பல மாநிலங்கள் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிட்டுள்ளன. இதில் இடம்பெற்றிருப்பவா்கள் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது எந்தவொரு கூடுதல் ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை. இதில் இடம்பெறாத வாக்காளா்கள் கடவுச் சீட்டு, ஆதாா் உள்பட தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 12 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கூடுதலாக சமா்ப்பிக்க வேண்டும்.