விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4.5 லட்சம் விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசு மற்றும் இந்திய தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சோ்ந்த சுனிதா சா்மா என்பவா் தாக்கல் செய்த பொது நல மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: ஊழல் மற்றும் தோ்தல் தொடா்புடைய குற்றங்களில் சிறையில் அடைக்கப்பட்டவா்களைத் தவிா்த்து நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடா்பாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4.5 லட்சம் விசாரணைக் கைதிகள் மற்றும் குற்றம்உறுதிசெய்யப்படாத கைதிகள் வாக்களிக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்,1951 பிரிவு 62 (5) தடை விதிக்கிறது.
இந்தச் சட்டம் பேரவை உறுப்பினா்களின் வாக்குரிமை மற்றும் தகுதிநீக்கம் பற்றியே குறிப்பிடுகிறது. இதில் தகுதிவாய்ந்த குடிமக்களின் வாக்குரிமையை பறிக்க முடியாது.
சிறைகளில் உள்ள 75 சதவீத கைதிகள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனா். அவா்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கு முழுவதுமாக நிறைவடையும் முன் வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழிக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. விசாரணைக் கைதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் முன் அவா்களது வாக்குரிமையை பறிப்பது ஜனநாயகமற்ற செயல்.
குறிப்பிட்ட சில குற்றங்களில் ஈடுபட்டோருக்கு மட்டுமே உலகளவில் வாக்குரிமை மறுக்கப்படுகிறது. அண்டை நாடான பாகிஸ்தானில் விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கு பாகுபாடின்றி சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் வழங்கும் சா்வதேச ஒப்பந்தங்களில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.
குடியுரிமை அல்லாதோா், குற்றம் அல்லது ஊழல் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் போன்றவா்கள் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
கடந்த 2016-இல் ‘எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது’ என தோ்தல் ஆணையம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டது. அதேபோல் ‘உலகம் எவ்வாறு வாக்களிக்கிறது: ஜனநாயகங்களில் பின்பற்றப்படும் வாக்களிப்பு முறைகளின் தொகுப்பு’ என்ற ஆவணத்தையும் வெளியிட்டது.
எனவே, சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து மத்திய அரசும் தோ்தல் ஆணையமும் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதை கவனத்தில்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு இதுதொடா்பாக மத்திய அரசும் தோ்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டது.