
பாட்னா: பிகாரில் மூன்றாவது அணியை அமைப்பதில் ஓவைசி மும்முரம் காட்டி வருகிறார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய இரு வேறு தேதிகளில் மொத்தம் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் அனைத்து இந்திய மஜ்லிஸ்-இ-இட்டேஹதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சி 4 இடங்களில் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அம்மாநிலத்தில் மக்கள் செல்வாக்கை மேலும் அதிகரிக்க ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தீர்மானித்துள்ளது.
அந்த வகையில், பிகாரில் 100 இடங்களில் போட்டியிடத் திட்டமிடப்பட்டிருப்பதாக ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தெரிவித்துள்ளது. இது, கடந்த காலங்களில் பிகாரில் நடைபெற்ற தேர்தல்களில் அக்கட்சி போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கையைவிட 5 மடங்கு அதிகம். மேலும், பிகாரில் மூன்றாவது அணியைக் கட்டமைக்கப் போவதாகவும் அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
இது குறித்து, பிகார் மாநில தலைவர் அக்தருல் இமான் பேசியதாவது: “பிகாரில் 100 இடங்களில் போட்டியிடுவதே எங்கள் திட்டம். பிகாரில் எங்கள் இருப்பு என்ன என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணியும் பிகாரில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியான மகாகாத்பந்தன் கூட்டணியும் அறிந்துகொள்ளப் போகிறார்கள்.
மதச்சார்பற்ற வாக்காளர்களின் வாக்குகளை எங்கள் கட்சி பிரிப்பதாக, கடந்த காலங்களில் குற்றஞ்சாட்டிய மகாகாத்பந்தன் கூட்டணி இனிமேலும் அந்தக் குற்றச்சாட்டை சுமத்த முடியாது. ஏனெனில், ராஷ்திரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் தேஜஸ்வி யாதவுக்கும் கடிதம் எழுதியிருந்தேன். அதில், ஒன்றாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட எங்கள் தரப்பிலிருந்து விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு பதிலும் வரவில்லை.
இந்த நிலையில், இப்போது, பிகாரில் எங்கள் கால்தடங்களைப் பதிய நாங்கள் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும். மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு தெரிந்துவிடும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.