
பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்து பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி 6 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு கடந்த வியாழக்கிழமை வந்தடைந்தார். இந்த நிலையில், புது தில்லியிலுள்ள ஆப்கன் தூதரகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 10) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீா்கான் முத்தாகி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளர்கள்கூட இல்லை.
இந்நிகழ்வில் பெண் பத்திரிகையாளர்களோ அல்லது ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்களோ ஒருவர்கூட இல்லாதது, திட்டமிட்டே பெண்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் பின்பற்றப்பட்டுவரும் நிலையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று ஆப்கன் தலைமை தீர்மானித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பெண் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று(அக். 11) பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், ‘செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் நீக்கப்பட்டதைக் குறித்து பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
மகளிர் உரிமைகளுக்காக நீங்கள் அளிக்கும் அங்கீகாரம் என்பது, ஒவ்வொரு தேர்தலின்போதும் நீங்கள் உயர்த்திப்பிடித்து முன்மொழிந்து பேசும் நடத்தைகள் மட்டுமல்ல என்பது உண்மையானால், இந்தச் செயல், அதாவது இந்தியாவின் மிக சாமர்த்தியமான சில பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி, பெண்களை நாட்டின் முதுகெலும்பாகவும் நாட்டின் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது?’ என்ற கேள்வியை எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார் பிரியங்கா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.