
டேராடூன்: உத்தரகண்ட்டில் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட்டில் கடந்த செப். 21-இல் நடைபெற்ற அரசுத் தேர்வில், வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அத்தேர்வை ரத்து உத்தரகண்ட் அரசு தேர்வாணையமான உத்தரகண்ட் சப்ஆர்டினேட் சர்வீசஸ் செலக்ஷன் கமிஷன் (யூகேஎஸ்எஸ்எஸ்சி) சனிக்கிழமை(அக். 11) உத்தரவிட்டுள்ளது.
உத்தரகண்ட்டில் காலியாக உள்ள 416 அரசுப் பணிகளுக்காக செப். 21-இல் நடத்தப்பட்ட பட்டதாரி அளவிலான தேர்வு வினாத்தாள், முன்கூட்டியே வெளியானதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. ஹரித்துவாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், தேர்வு நாளன்று வினாத்தாளின் 3 பக்கங்கள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இத்தேர்வை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதியுள்ளனர். இந்த நிலையில், ‘உத்தரகண்ட் வேலையில்லாதோர் சங்கம்’ என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ள தேர்வர்கள் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மிகப்பெரியளவில் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து, போராட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்து இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் விரிவான விசாரணை அறிக்கையை முதல்வர் சமர்ப்பித்தது.
இந்த நிலையில், பல்வேறு தரப்பு கோரிக்கைகளை ஏற்று தேர்வு ரத்தும் செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு அடுத்த 3 மாதங்களுக்குள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு தேதி பின்னர் அறிவிப்படும் என்றும் தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.