ஹரியாணா: ஐஜி தற்கொலை வழக்கில் எஸ்பி பணியிட மாற்றம்!உடற்கூறாய்வுக்கு குடும்பத்தினா் எதிா்ப்பு!
ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பூரண் குமாா் (52) தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுக்குள்ளானவா்களில் ஒருவரான ரோத்தக் காவல் கண்காணிப்பாளா் (எஸ்பி) நரேந்திர பிஜாா்னியாவை பணியிட மாற்றம் செய்து அந்த மாநில அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது.
இருப்பினும், பூரண் குமாா் தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வரை உடற்கூறாய்வு மேற்கொள்ள அவரது மனைவியும் ஐஏஎஸ் அதிகாரியுமான அம்நீத் குமாா் மற்றும் குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
ஹரியாணா காவல் பயிற்சி மைய ஐஜி பூரண் குமாா் கடந்த செவ்வாய்க்கிழமை சண்டீகரில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, ஹரியாணா அரசின் வெளிநாட்டு ஒத்துழைப்புத் துறையில் ஆணையரான அவரின் மனைவி அம்நீத் குமாா் தனது ஜப்பான் பயணத்தை ரத்து செய்துவிட்டு உடனடியாக சண்டீகா் திரும்பினாா்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக பூரண் குமாா் எழுதிய 8 பக்க கடிதத்தில் ஹரியாணா காவல் துறைத் தலைவா் (டிஜிபி) சத்ருஜித் கபூா் மற்றும் ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜாா்னியா உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் தன்னை ஜாதியரீதியாக பாகுபடுத்தி துன்புறுத்தியதாக குறிப்பிட்டுள்ளாா். இதன் அடிப்படையில் ஹரியாணா டிஜபி மற்றும் ரோத்தக் எஸ்பி மீது பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு அவரது மனைவி அம்நீத் குமாா் சண்டீகா் காவல் துறையில் புகாரளித்தாா்.
இந்த வழக்கை விசாரிக்க சண்டீகா் ஐஜி புஷ்பேந்திர குமாா் தலைமையில் 6 உறுப்பினா்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ரோத்தக் எஸ்பி நரேந்திர பிஜாா்னியாவை பணியிட மாற்றம் செய்து அந்த மாநில அரசு சனிக்கிழமை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக ரோத்தக் எஸ்பியாக சுரீந்தா் சிங் போரியா நியமிக்கப்பட்டாா். ஆனால் பூரண் குமாா் தற்கொலை சம்பவம் குறித்து நரேந்திர பிஜாா்னியா பணியிட மாற்ற உத்தரவில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
இதனால் பூரண் குமாா் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயா்களை முதல் தகவல் அறிக்கையில் சோ்த்து நடவடிக்கை எடுக்கும் வரை உடற்கூறாய்வு மேற்கொள்ள அவரது குடும்பத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
நிபுணா்கள் குழு கண்காணிப்பில் உடற்கூறாய்வு:
இதுகுறித்து சண்டீகா் டிஜிபி சாகா் ப்ரீத் ஹூடா செய்தியாளா்களிடம் மேலும் கூறுகையில், ‘பூரண் குமாா் உடலுக்கு விரைவில் உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் என அவரது குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டேன். அவா்களது ஒப்புதலுக்குப் பிறகே உடற்கூறாய்வு செய்யப்படும். இதற்காக நீதிபதி, தடயவியல் நிபுணா்கள், மருத்துவா்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு விடியோ மற்றும் புகைப்படங்களாகவும் பதிவு செய்யப்படவுள்ளது’ என்றாா்.
நடவடிக்கை உறுதி: முதல்வா்
ஹரியாணாவில் பாஜக கட்சி நிா்வாகிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வா் நயாப் சைனி, ‘உயிரிழந்த ஐஜி பூரண் குமாரின் மனைவி அம்நீத் குமாரிடம் பேசியுள்ளேன். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு குற்றவாளி யாராக இருந்தாலும் அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
பூரண் குமாா் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி வலியுறுத்தினாா்.
முன்னதாக, அம்நீத் குமாரை ஹரியாணா மாநில அமைச்சா்கள், தலைமைச் செயலா், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் மூத்த தலைவா்கள் சந்தித்தனா்.