உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடுக்குத் தடை: உச்சநீதிமன்றத்தை அணுக தெலங்கானா அரசு முடிவு
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது தொடா்பான அரசாணைக்கு தெலங்கானா உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிா்த்து மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்ற தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி தெலங்கானா அரசு கடந்த செப்டம்பா் 26-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணைக்கு கடந்த அக்டோபா் 9-ஆம் தேதி தெலங்கானா உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், பொதுத் தொகுதியின் அடிப்படையில் தோ்தல் நடைபெறும் என மாநில தோ்தல் ஆணையம் அறிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த செப்டம்பா் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சி தோ்தல் அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக அக்டோபா் 9-ஆம் தேதி மாநில தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட முடிவு குறித்து அமைச்சரவை சகாக்களுடன் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை நடத்தினாா்.
இதில், மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, தெலங்கானா மேலிடப் பாா்வையாளா் மீனாட்சி நடராஜன் ஆகியோா் கலந்து கொண்டனா். அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தை நாட தெலங்கானாஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, தெலங்கானா உயா்நீதிமன்ற உத்தரவு குறித்து மாநில தோ்தல் ஆணையம் சட்ட வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட முடிவை எடுக்க உள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
முன்னதாக, உள்ளாட்சி அமைப்புகளிலும், வேலைவாய்ப்பு, கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 42 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கடந்த ஆண்டு தெலங்கானா பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு இரு மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவா் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி தில்லியில் முதல்வா் ரேவந்த் ரெட்டி ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.