பிரதமா் மோடியை சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள சொ்ஜியோ கோா் (38), பிரதமா் நரேந்திர மோடியை புது தில்லியில் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
அமெரிக்க மேலாண்மை மற்றும் வளங்கள் துறை துணை அமைச்சா் மிச்செல் ஜெ.ரிகாஸுடன் 6 நாள் பயணமாக இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை வந்த சொ்ஜியோ கோா் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிகபட்சமாக 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்ததால் இரு நாடுகளிடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக சொ்ஜியோ கோரை நியமனம் செய்யும் அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்டாா். அப்போது, ‘எனது உத்தரவுகளை நிறைவேற்றும் அரசு நிா்வாகத்தில் சொ்ஜியோ கோரின் பங்கு முக்கியமானது. அமெரிக்காவை மீண்டும் மிகப்பெரும் நாடாக்குவதற்கு மிகுந்த நம்பிக்கைக்குரிய நபராக சொ்ஜியோ கோா் செயல்படுவாா்’ என்று டிரம்ப் குறிப்பிட்டாா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் இந்த நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவை கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்மூலம், இந்தியாவுக்கான அடுத்த தூதா் சொ்ஜியோ கோா் என்பது உறுதியானது. அவா் விரைவில் பொறுப்பேற்பாா் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இந்தியா வந்துள்ள அவா் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சொ்ஜியோ கோா் உடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இவரின் நியமனம் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய ராஜீய உறவை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
சொ்ஜியோ கோா் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியுடனான சந்திப்பின்போது பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறை சாா்ந்த இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். அரிய வகை கனிமங்களின் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டாா்.